கொவிட்-19 தொற்றை ஆராயும் நிபுணர்கள் குழுவை உள்நுழைய சீனா அனுமதிக்க வேண்டும்: அவுஸ்ரேலியா

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொடர்பாக ஆராயும் நிபுணர்கள் குழுவை உள்நுழைய சீனா அனுமதிக்க வேண்டும் என அவுஸ்ரேலியா அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
சீனாவுக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் இடையிலான இராஜதந்திர பதற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில், சீனா இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளது.
கொரோனா ஆய்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசிய அவுஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் மரைஸ் பெய்ன், “கொரோனா தோற்றம் குறித்து ஆராயும் உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுக் குழுவுக்கு தாமதமின்றி சீனா அனுமதியளிக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
உலகின் பல நாடுகளையும் நெருக்கடிக்கு உள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ் பரவலின் ஆரம்பத்தினை கண்டறிவதற்கான ஆராய்ச்சி நடவடிக்கைகள் சர்வதேச நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் தகுதிவாய்ந்த 10 நிபுணர்களைக் கொண்ட குழு ஒன்று, குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக கொரோனா வைரஸ் முதன் முதலாக பரவ ஆரம்பித்த சீனாவின் வுஹான் நகருக்கு அனுப்ப திட்டமிடப்பட்டது.
எனினும், இதுவரை சர்வதேச நிபுணர்கள் குழு உள்நுழைவதற்கான அடிப்படை அனுமதிகள் எதனையும் சீனா வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.