கோவேக்சின் தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்பட்டால் இழப்பீடு வழங்கப்படும்- பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு
In இந்தியா January 17, 2021 3:06 am GMT 0 Comments 1238 by : Yuganthini

கோவேக்சின் தடுப்பூசியால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் அதற்கு தகுந்த இழப்பீடு வழங்கப்படும் என சுகாதார ஊழியர்களுக்கு பாரத் பயோடெக் நிறுவனம் உத்தரவாதம் அளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று (சனிக்கிழமை) காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஐதராபாத்தின் பாரத் பயோடெக் நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து உருவாக்கியுள்ள கோவேக்சின் தடுப்பூசியின் முதல் ‘டோஸ்’ சுகாதார ஊழியர்களுக்கு செலுத்தப்பட்டது.
முன்னதாக கோவேக்சின் தடுப்பூசியால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் அதற்கு தகுந்த இழப்பீடு வழங்கப்படும் என சுகாதார ஊழியர்களுக்கு பாரத் பயோடெக் நிறுவனம் உத்தரவாதம் அளித்துள்ளது. இதுதொடர்பான படிவத்தில் அவர்கள் கையெழுத்திட்ட பின்னரே அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அந்த படிவத்தில், “கோவேக்சின் கொரோனாவுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை உற்பத்தி செய்யும் திறனை முதலாம் மற்றும் 2ம் கட்ட சோதனைகளில் நிரூபித்துள்ளது. இருப்பினும் மருத்துவ செயல்திறன் இன்னும் நிறுவப்படவில்லை.
இது இன்னும் 3ஆம் கட்ட மருத்துவ பரிசோதனையில் ஆய்வு செய்யப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவேக்சின் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட நபருக்கு ஏதேனும் பாதகமான நிகழ்வு ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட நபருக்கு அரசு நியமித்த வைத்தியசாலைகளில் மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தரமான பராமரிப்பு வழங்கப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒருவேளை மிகவும் மோசமான பக்க விளைவு ஏற்பட்டால் அது தடுப்பூசியால் தான் ஏற்பட்டது என்று நிரூபிக்கப்படும் பட்சத்தில் பாரத் பயோடெக் நிறுவனம் மூலம் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.