தமிழ் இனத்திற்கு செய்த கர்மவினையால் மீண்டும் மீண்டும் தெருவுக்கு வரும் ராஜபக்ஷ குடும்பம்
In சிறப்புக் கட்டுரைகள் September 6, 2018 8:41 am GMT 0 Comments 4963 by : Varshini
இலங்கையில் குடும்ப ஆட்சிக்கு எதிராக மக்கள் வாக்களித்து ராஜபக்ஷாக்களை வீட்டுக்கு அனுப்பிய போதும், அவர்கள் மீண்டும் எப்படியாவது ஆட்சியினைப் பிடித்துவிட வேண்டும் என முனைப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு ராஜபக்ஷாக்களின் அரசியல் விதியினை மக்கள் மாற்றியமைத்த போதிலும் அவர்கள் ஓய்ந்தபாடில்லை. ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மீண்டும் ஆட்சி அதிகாரத்தைப் பெரும் நோக்கில், நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் என பல்வேறு வகையில் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் பொதுத் தேர்தலும் நடைபெற்றது.
பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று தான் பிரதமராக வரலாம் என்று கனவு கண்ட போதிலும் மஹிந்தவிற்கு அது எட்டாக்கனியாகியது. ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் ஒன்றிணைந்து ஆட்சியமைக்க, 16 உறுப்பினர்களைக் கொண்ட, தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சியாகியது.
சரி, பிரதமராகத்தான் முடியவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் பதவியையாவது பிடித்துவிடலாம் என்றால், அது முடியவில்லை. காரணம் மஹிந்தவின் ஆதரவுக் கட்சி எதிலும் அதிக உறுப்பினர்கள் இருக்கவில்லை. இதனால் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவரானார்.
எதிர்பார்த்தவை ஒன்றும் கிடைக்காது போகவே அரசியல் ரீதியாக விரக்தியடைந்த மஹிந்தவும், அவரது தரப்பினரும் இணைந்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியாக தம்மை அமைத்துக் கொண்டு எதிர்க்கட்சி பதவியினை கோரினர். ஆனாலும் அது பதிவுசெய்யப்பட்ட கட்சியாக தேர்தலில் போட்டியிடாத காரணத்தினால் அந்த கனவிலும் மண் விழுந்தது.
என்னடா இது… சாண் ஏற முழம் சறுக்கும் கதையாக மஹிந்தவின் அரசியல் பயணம் சென்று கொண்டிருக்க, அவரது சகாக்கள் மஹிந்தவை உசிப்பிவிட்டு தமது அரசியல் இலாபங்களை அடைந்துகொள்ள முற்படுகின்றனர். அதன் விளைவாக மஹிந்தவும் புதிய கட்சியைத் தொடங்கி தனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கிறார். அதாவது ராஜபக்ஷாக்களின் அரசியல் பயணத்திற்கான புதிய கட்சியாக பொதுஜன பெரமுன உருவாக்கப்பட்டது.
இவ்வாறு புதிய கட்சி, ஊடக சந்திப்பு, எதிர்ப்பு அறிக்கைகள் என்றிருந்த மஹிந்தவும் அவரது தரப்பினரும், நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைக்கான தேர்தலில் அதிகபடியான இடங்களை அவர்களது கட்சி பெற்றதுடன் உத்வேகம் அடைந்து பொதுத் தேர்தலைச் சந்திப்பதற்காக ஆயத்தமாகினர். இவ்வாறு தமக்கு மக்கள் செல்வாக்கு இருக்கின்றது என்பதை எண்ணிக் கொண்டவர்கள் இன்று பொதுத் தேர்தலை நடத்துமாறு நல்லாட்சியினை வலியுறுத்தி வருகின்றனர்.
இதேவேளை நல்லாட்சியில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற ஊழல்கள், இலஞ்சங்கள், அதிகார துஷ்பிரயோகங்கள் தொடர்பில் கதைத்துக் கொண்டிருக்க, ராஜபக்ஷாக்கள் நல்லாட்சி மக்களின் வாழ்க்கைச் சுமையை அதிகரித்துவிட்டது. வேலைவாய்ப்பில்லை, அபிவிருத்தி இல்லை, மனித உரிமை மீறலுக்கு எதிரான சர்வதேச அமைப்புக்களுக்கு இராணுவத்தையும் நாட்டையும் காட்டிக்கொடுத்துவிட்டது என்று கூக்குரல் எழுப்பிவருகின்றனர்.
இத்தகைய நிலையில் நேற்று (05.09.2018) கொழும்பை ஆக்கிரமிக்கும் வகையில் ஜனபலய கொழும்பட்ட எனும் தொனிப்பொருளில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை ராஜபக்ஷ தரப்பு முன்னெடுத்திருந்தது. நல்லாட்சியினை வீட்டுக்கு அனுப்புவதற்கான மக்கள் எதிர்ப்பு என்ற போர்வையில் அவர்கள் முன்னெடுத்த காரியங்கள் நாட்டு மக்கள் இடத்தில் ராஜபக்ஷ தொடர்பான வெறுப்பினை அதிகரித்துள்ளது.
ராஜபக்ஷ குடும்பத்தினர் ஆட்சிக் கதிரையினை பிடிப்பதற்கு அன்றாடம் கூலித் தொழில் செய்கின்ற பாமர மக்களைத் தூண்டி அவர்களுக்கு, மது, உணவு, போக்குவரத்து கொடுத்து ஆர்ப்பாட்டங்களை செய்வதாக பல சிங்கள ஊடகங்கள் விமர்சித்துள்ளன.
அதேவேளை கொழும்புக்கு பேரணியாக வந்தவர்கள் நகரத்தை அசுத்தப்படுத்தியதுடன், கொழும்புவாசிகளின் அன்றாட செயற்பாடுகளை குழப்பியிருந்தனர். மேலும் வீதிகளில் தங்கியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், மது போதையில் ஆடிப்பாடியதுடன், அவர்கள் ஏதோ கொழும்பிற்கு சுற்றுலா வந்தது போன்று நடந்து கொண்டனர்.
இலவசமாக குடி போதை, உணவு, காசு, போக்குவரத்து வசதி கிடைக்கின்றபோது, ஊரில் சும்மா இருப்பதைவிட ஒருக்கால் கொழும்புக்குச் சென்று வரலாம் என்ற எண்ணத்தில்தான் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்களே ஒழிய மஹிந்த தரப்பினருக்கு ஆட்சியைப் பெற்றுக் கொடுப்பதற்கான அழுத்ததைப் பிரயோகிப்பதற்காக அல்ல. இந்த விடயம் மஹிந்த தரப்பினருக்கும், நல்லாட்சியினரும் ஏன் நாட்டு மக்களுக்குமே தெரிந்த விடயம். இந்த நிலையில் இரவிரவாக கொழும்பை முற்றுகையிடப் போவதாக மஹிந்த ராஜபக்ஷ தனது உரையிலும் குறிப்பிட்டிருந்தார். இதில் என்ன ஒரு வேடிக்கை என்றால் மஹிந்த பேசிய கையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வந்தவர்கள் வீடுகளுக்குச் செல்லும் நோக்குடன் தாம் வந்த வாகனங்களை நோக்கிச் சென்றுவிட்டனர். அந்த வகையில் பார்க்கும்போது மஹிந்த தரப்பு ஆட்சி பிடிப்பு மக்கள் பேரணி தோல்வியில் முடிந்துள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வீதிகளில் அலைக்கழிய ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த மஹிந்த தரப்பினர் சொகுசு விடுதிகளில் உண்டுகளித்து இருந்துள்ளனர். ஆட்சியும் அதிகாரமும் அரசியல்வாதிகளுக்கு, துன்பமும் கஷ்டமும் சாதாரண மக்களுக்கு. இதுதான் இன்றைய இலங்கை அரசியலின் நிலை.
மக்களின் தீர்ப்பினை ஏற்று முன்னாள் ஜனாதிபதி என்ற கௌரவத்துடன் ஓய்வில் இருக்காமல் மீண்டும் மீண்டும் தாமே இலங்கையை ஆளவேண்டும் என்ற மஹிந்த மற்றும் அவரது சகாக்களின் விடாப்பிடியான சிந்தனையினால் நடுவீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்து தனது கௌரவத்தையே கேள்விக்குள்ளாக்கியுள்ளார் மஹிந்த என பலரும் விமர்சித்து வருகின்றனர்.
என்னதான் நடுவீதியில் இருந்து ஆர்ப்பாட்டம் செய்தாலும், மஹிந்தவின் ஆட்சியில் சிறுப்பான்மை சமூகங்களுக்கு அவர் செய்த துரோகங்களை மக்கள் மறந்துவிடவில்லை. தமிழ் மக்களை கொத்துக்கொத்தாக கொன்று குவித்துவிட்டு மனிதாபிமானப் போர் என கூறிய மஹிந்த, தமிழ் மக்களின் சாபத்தினால் நடுவீதிக்கு வந்துவிட்டதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
மஹிந்த தரப்பினர் 2015இற்குப் பின்னர் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் என்ற முன்னெடுப்பில் பல கோடி ரூபாக்களை கொட்டி அழித்து வருகின்றனர். இவ்வாறு கோடி கோடியாக செலவு செய்யும் பணம், ஆட்சியில் இருந்த காலத்தில் கொள்ளையடிக்கப்பட்டவை என்ற விடயமும் தொடர்ச்சியாக உறுதிப்படுத்தப்பட்டு வருவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.
ஒரு நாட்டின் ஜனாதிபதியாக இருந்தவர், மீண்டும் ஆட்சியினைப் பிடித்துவிட வேண்டும் என இப்படி அங்கலாய்த்துத் திரிகின்றார் என்றால் அதில் இரண்டு விடயங்கள் உள்ளன. ஒன்று கடந்த காலத்தில் ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல்கள், பண மோடிகளை பாதுகாத்துக் கொள்ளவும், அதற்கு எதிராக நல்லாட்சி அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கையிலிருந்து தப்பித்துக் கொள்வது. மற்றையது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கி தொடர்ச்சியாக ராஜபக்ஷ குடும்பத்தினரே ஆட்சியில் இருப்பது.
இவ்வாறு ஒரு குடும்பமே நாட்டை ஆள்வதற்கான மஹிந்தவின் ஆசையினால் நாட்டு மக்கள் நாளாந்தம் துன்பங்களையே அனுபவித்து வருகின்றனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் நிம்மதியாக வாழலாம் என்ற மக்களின் நினைப்புக்கு, இந்த ராஜபக்ஷாக்களின் ஆட்சி மோகம் தடையாகவுள்ளது.
ஆகவே பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையினைக் குழப்புகின்ற இத்தகைய ஆர்ப்பாட்டங்களை அரசாங்கம் கட்டுப்படுத்துவதுடன், மஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் விசாரணைகளை துரிதப்படுத்தி, அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதன் மூலம் நாட்டில் ஏற்படும் இத்தகைய அநாவசிய போராட்டங்களை தடுத்துநிறுத்தலாம் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பா.யூட்
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.