சங்கானையில் மீன் சந்தை, மதுபானசாலை மூடல்: பல குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தல்
In இலங்கை November 28, 2020 4:29 am GMT 0 Comments 1712 by : Yuganthini
சங்கானை நகரில் அமைந்துள்ள மீன் சந்தை மற்றும் மதுபானசாலை என்பன மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.
மேலும், சங்கானை மீன் சந்தை வியாபாரிகள் 36 பேர், குடும்பத்துடன் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சைக்கிள் கடை ஒன்றினைச் சேர்ந்த 6 பேரின் குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை 3 நாட்கள் மூடப்பட்டுள்ளது.
சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் இந்த நடவடிக்கை, பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொழும்பிலிருந்து காரைநகருக்குத் திரும்பிய ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று (வெள்ளிக்கிழமை) உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவர் சென்று வந்த இடங்களில் தொடர்புடையவர்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
கடந்த 21ஆம் திகதி, கொழும்பு வெள்ளவத்தையிலிருந்து காரைநகருக்கு வருகை தந்த அவர், 3 நாட்களுக்கு மேல் பல இடங்களுக்கு நடமாடிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு, நேற்று அவரது மாதிரிகள் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு அவர் சென்றதால் வைத்தியசாலையை 3 நாட்களுக்கு மூடுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வைத்தியசாலையின் சேவையாளர்கள் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த நபர், சங்கானை மீன் சந்தைக்குச் சென்றதால் அதனை மறு அறிவித்தல் வரை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், 36 வியாபாரிகள் குடும்பத்துடன் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், அவர் சைக்கிள் கடைக்குச் சென்ற நிலையில் அங்கு இருந்த 6 பேர் குடும்பத்துடன் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சங்கானை மதுபானசாலைக்குச் சென்றார் என்று கண்டறியப்பட்ட நிலையில் மதுபானசாலை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. அங்கு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த 4பேர் குடும்பத்துடன் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். அதில் தொற்று இல்லை என்று முடிவு கிடைத்தால் மீன் சந்தை, மதுபானசாலை என்பன திறக்க அனுமதிக்கப்படும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.