சனநெரிசல் அதிகமாக உள்ள பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது – சுகாதார பரிசோதகர்கள்
In இலங்கை December 7, 2020 4:23 am GMT 0 Comments 1408 by : Dhackshala

மேல் மாகாணத்தில் சனநெரிசல் அதிகமாக உள்ள பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளமையை அவதானிக்க முடிவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பி.சி.ஆர் பரிசோதனை செய்துகொண்டவர்கள் அதன் முடிவுகள் கிடைக்கப்பெறும் வரையில், வெவ்வேறு பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என அந்த சங்கத்தின் செயலாளர் மஹிந்த பாலசூரிய பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொழும்பு மாநகர சபை எல்லைப் பகுதிகளில் தொடர்ந்தும் பல்வேறு பகுதிகளில் நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதில் வீழ்ச்சிப்போக்கை அவதானிக்க முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கடந்த சில நாட்களாக குறைந்தளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட பொரளை மற்றும் கறுவாத்தோட்டப் பகுதிகளில் தற்போது நோயாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்படுவதை அவதானிக்க கூடியதாக உள்ளதாகவும் மஹிந்த பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரத்தில் மேல் மாகாணத்தின் ஏனைய பகுதிகளுக்கும் இந்த நோய் பரவல் ஏற்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது என்றும் குறைந்தளவு நிலப்பரப்பில் அதிக மக்கள் தொகை உள்ள கிராமங்கள் மற்றும் மாவட்டங்களை அண்மித்த பகுதிகளில் இந்த நிலைமையில் அதிகரிப்பை காணமுடிகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக அக்குறணை, நுவரெலியா, ஹட்டன், அம்பகமுவ மற்றும் குருணாகலை மாநகர எல்லை பகுதிகளும் இந்த நிலைமையில் உள்ளன என்றும் மஹிந்த பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.
எனவே, பி.சி.ஆர் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் அந்த அறிக்கை கிடைக்கும் வரையில், தங்களது இருப்பிடங்களிலேயே இருக்க வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மஹிந்த பாலசூரிய பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.