சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்தியது பஞ்சாப் அணி!
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில், பஞ்சாப் அணி 6 விக்கட்டுக்களினால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 22 ஆவது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கிங்ஸ்லென் பஞ்சாப் அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர் பஞ்சாப் அணியினரின் துல்லியமான பந்து வீச்சில் சிக்கி தடுமாற்றத்துடனான துடுப்பாட்டத்தையே வெளிப்படுத்தினர்.
இறுதியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களை எடுத்தது. துடுப்பாட்டத்தில் வோர்னர் இறுதி வரை ஆட்டமிழப்பின்றி 70 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.
இதனையடுத்து 151 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் ஆரம்ப வீரர் கெய்ல் 16 ஓட்டங்களுடன் வெளியேற, அடுத்து களமிறங்கிய அகர்வால், ராகுலுடன் இணைந்து நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.
ஒரு கட்டத்தில் இருவரும் அரைசதம் கடக்க மயங்க் அகர்வால் 55 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் சரிய இறுதி ஓவரில் 11 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
ரசிகர்கள் அனைவரும் பரபரப்பில் இருக்க 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து பஞ்சாப் அணி தன்னுடைய சொந்த மண்ணில் வெற்றியை பதிவு செய்தது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.