‘சர்க்கஸில் இருந்த கோமாளிகள் இப்போது சர்க்காரில்’ – ஸ்டாலின்
In இந்தியா April 13, 2019 10:35 am GMT 0 Comments 2377 by : Yuganthini

முன்பெல்லாம், சர்க்கஸில் மட்டும்தான் கோமாளிகள் இருந்தார்கள். ஆனால் தற்போது சர்க்காரிலேயும் கோமாளிகள் உள்ளனரென தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஸ்டாலின் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“திருச்சி, தி.மு.கவின் இரும்புக் கோட்டை. இங்குதான் பல்வேறு சிறப்பு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. மத்தியில் ஆளும் மோடியின் சர்வாதிகார ஆட்சியையும், மாநிலத்தில் எடப்பாடி ஆட்சியையும் பற்றி ஒரு சில வரிகள் கூற விரும்புகிறேன்.
முன்பெல்லாம், வங்கிகளில் கொள்ளையடிப்பார்கள் ஆனால் இப்போது, வங்கியையே கொள்ளையடிக்கின்றனர். அதேபோன்று விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது. ஆனால் இப்போது, விவசாயத்தையே தள்ளுபடி செய்கின்றனர்.
முன்பெல்லாம், மீனவர்கள் கடலில் மீன்களை பிடித்தனர். ஆனால் இப்போது, மீனவர்களையே பிடிக்கின்றனர். முன்பெல்லாம், வேட்பாளர்களை விலைக்கு வாங்கினார்கள் இப்போது, கட்சியையே விலைக்கு வாங்குகின்றனர். நான் யாரை கூறுகிறேன் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
பாஜகவின் தேர்தல் அறிக்கை, முரண்பாட்டின் மொத்த உருவம். ஆனால், காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி வெளியிட்ட தேர்தல் அறிக்கை, ஏழை மக்களுக்கானது. பிரதமராக வரக்கூடிய ராகுல்காந்தி, ரஃபேல் ஊழலை சிறிதும் பயமின்றி முதலில் பேசினார். அதற்கான ஆதாரங்கள் புத்தகமாகவே வெளியிடப்பட்டது.
மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதே தி.மு.க.வின் கொள்கை. தேர்தல் முடிவுகள் வந்த பின்னர், முதலமைச்சர் எடப்பாடியின் வாழ்க்கையே கிழியப்போகிறது. பா.ஜக.வின் சேவகர்களாக அ.தி.மு.க.வினர் உள்ளனர். இவர்களுக்கு விடை கொடுக்க வேண்டும்.
ராகுல் காந்தியை மன்னர் குடும்பம் என கூறுகிறீர்கள். ஆனால், ஆரம்ப கால கட்டத்தில் ஏழையாக இருந்த நீங்கள், ஏழைகளைப் பற்றி யோசித்தீர்களா, கார்ப்பரேட்களுக்குதான் மோடி காவலாளி. பண மதிப்பிழப்பை தன்னிச்சையாக அறிவித்த சர்வாதிகாரி மோடி” என, ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.