சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: பெயர் பலகையில் தமிழை முன்னுரிமையாக்கும் பணி முன்னெடுப்பு!
யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையத்தின் தரிப்பிடங்களுக்கான பலகைகளில் தமிழ் மொழியை முன்னுரிமையாக மாற்றும் பணி மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ். மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணனின் பணிப்புரைக்கு அமைய உள்ளூர் அச்சக நிறுவனம் ஒன்றின் ஊடாக தரிப்பிடப் பலகைகள் சீரமைக்கப்படுகின்றன.
இதன்படி, சீரமைப்புச் செய்யப்பட்ட பெயர் பலகையொன்று மாநகர முதல்வரிடம் இன்று (வெள்ளிக்கிழமை) காண்பிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையத்தின் தரிப்பிடம் புதிதாக அமைக்கப்பட்டு நேற்றுமுன்தினம் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
அங்கு ஒவ்வொரு மாவட்டப் பேருந்துகள் தரித்து நிற்கும் இடங்களைக் குறிக்கும் காட்சிப் பலகைகளில் சிங்கள மொழி முதலிலும் தமிழ்மொழி இரண்டாவதாகவும் இடம்பெற்றமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதுதொடர்பாக, யாழ். மாநகர முதல்வரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் பெயர் சீரமைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இன்னும் சில தினங்களில் சீரமைப்பு வேலைகள் முடிக்கப்பட்டுவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.