சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறுவதை கஜேந்திரகுமார், சுமந்திரன் விரும்பாததால் கைவிடப்பட்டது- சுரேஷ்
In ஆசிரியர் தெரிவு January 21, 2021 10:33 am GMT 0 Comments 2007 by : Litharsan
சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறுவதை கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், சுமந்திரனும் விரும்பவில்லை எனவும், இதனால் இந்தக் கோரிக்கை கைவிடப்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், “கிளிநொச்சி, வவுனியா, கொழும்பு, மீண்டும் கிளிநொச்சி என பல்வேறுபட்ட கூட்டத் தொடர்களுக்குப் பின்னர், ஒரு பொதுவான அறிக்கை தயாரிப்பிற்கு தமிழ் தேசியக் கட்சிகளில் எல்லோரும் ஒன்றுபட்டார்கள்.
இதேவேளை, தாங்கள் மாத்திரம்தான் ஒரேயொரு தமிழ் தேசியவாதிகள் என்றும் மற்றவர்கள் எல்லாம் துரோகிகள் என்றும் சொல்லப்பட்டு வந்த நிலையில், இவ்வாறு சொன்னவர்களின் வரைபுகளில் இனப்படுகொலை என்ற ஒரு வார்த்தை இடம்பெற்றிருக்கவில்லை.
அதற்குப் பின்னர், எங்களது தரப்பில் இருந்து, நான், சிவாஜிலிங்கம் போன்றோர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பொறுப்புக் கூறல் நடவடிக்கை விசாரணைக்கு இனப்படுகொலை என்ற விடயம் கொண்டுபோகப்பட வேண்டுமென வலியுறுத்தினோம்.
இதனால், தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீர்ந்து போகாது என்ற போதும், இலங்கையில் இனவழிப்பு இடம்பெற்றது, இன அழிப்புக்கான மூல காரணிகள் யார்? அது விசாரிக்கப்பட்டால்தான் நிச்சயமாக இலங்கை தமிழ் மக்கள் இன்னுமொரு இன அழிப்பில் இருந்து பாதுகாக்கப்படலாம். அந்த இனவழிப்பு என்பது சேர்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டோம்.
இதன்பின்னர்தான், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனை ஏற்றுக் கொண்டார். அவர் ஏற்றுக்கொண்டதன் பின்னர், சுமந்திரனுத் உடன்பாடு இல்லையென்றாலும் ஏற்று கொள்கின்றேன் என்றார்.
இந்நிலையில், கஜேந்திரகுமார் ஏற்றுக்கொள்வது அனைத்தையும் எவ்வாறு சுமந்திரன் ஏற்றுக்கொள்கின்றார் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், இவ்வாறான நடவடிக்கை அனைத்தும் நடந்து முடிந்ததன் பிற்பாடு, இதில் கையெழுத்து வைப்பதை ஒரு பிரச்சினையாக்கி சிறுபிள்ளைத் தனமாக மாற்றினார்கள்.
இந்தத் தயாரிப்பில் பலருடைய பங்களிப்பு இருந்தது. கட்சிகள் என்று பார்க்கும் போது தமிழரசுக் கட்சி மிகப் பழமையானது. ஆயுதம் எடுத்துப் போராடிய கட்சிகளாக ஈ.பி.ஆர்.எல்.எப்., ரெலோ, புளோட் ஆகியனவும் இருக்கின்றன.
இவர்கள் யாரும் கையெழுத்து வைக்கக்கூடாது என்றும் நேற்று வந்தவர்கள் கையெழுத்து வைக்கலாம் என்றும் சொல்வதெல்லாம் எனக்குப் புரியவில்லை. ஆனால், அனைவரும், கையெழுத்து வைக்கும்போது அந்த அறிக்கைக்கான கனதி கூடும். ஆனால், கையெழுத்து வைக்க முடியாது எனக் கூறிவிட்டார்கள். இது ஒரு சிறுபிள்ளைத்தனமான விடயம்.
இந்த ஆவணம் வருவதற்கு முன்பாக விக்னேஸ்வரன் தலைமையில் நான், சிறிக்காந்தா, அனந்தி ஆகியோர் கூடி ஒரு ஆவணத்தைத் தயார்செய்து இருந்தோம். அந்த ஆவணத்தில் நாங்கள் மிக முக்கியமான மூன்று கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம்.
நாங்கள் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என குறிப்பிட்டாருந்தோம். ஆனால், அதை அறிக்கையில் சேர்த்துக்கொள்ள மாட்டோம் எனக் கூறிவிட்டார்கள்.
ஏனெனில், நாங்கள் இவ்வாறான கோரிக்கைகளை முன்வைக்கக் கூடாது என்பது சுமந்திரன், கஜேந்திரகுமாரின் கருத்தாக இருந்தது. ஆகவே நாங்கள் அதனைக் கைவிட வேண்டிய தேவை வந்ததால் கைவிட்டோம்.
ஆகவே, நாங்கள் தயாரித்த அறிக்கை அவர்களுக்கும் கொடுக்கப்பட்டது. ஆனால், இதெல்லாம் அவர்களுக்குக் கிடைத்ததன் பிற்பாடு அவர்கள் தயாரித்த அறிக்கை என்பது இனப் படுகொலை இல்லை என்பதன் பிரதிபலிப்பாகத்தான் அவர்கள் கொண்டுவந்தார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.