சர்வதேச ரீதியாக இலங்கைக்கு எந்தவொரு அழுத்தமும் இனிமேல் ஏற்படாது – நாடாளுமன்றில் தினேஸ்!
In ஆசிரியர் தெரிவு November 25, 2020 9:37 am GMT 0 Comments 1524 by : Dhackshala
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின், இணை அனுசரணையில் இருந்து இலங்கை தற்போது விலகியுள்ளமையால், இலங்கைக்கு சர்வதேச ரீதியாக எந்தவொருப் பிரச்சினையும் ஏற்படாது என்று வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற குழுநிலை விவாதத்திலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நல்லாட்சி அரசாங்கத்தால்தான் நாடு கடந்த காலங்களில் காட்டிக்கொடுக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தினரால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு அவர்கள் அன்று இணை அனுசரணை வழங்கினார்கள்.
இது உலகிலேயே எங்கும் நடக்காத ஒரு விடயமாகும். இது இராணுவம் பெற்றுக் கொடுத்த அனைத்து வெற்றிகளையும் காட்டிக்கொடுக்கும் செயற்பாடாகும்.
எனினும், நாம் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த இணை அனுசரணையில் இருந்து விலகியுள்ளோம். எனவே, இதனால் நாட்டுக்கு எந்தவொரு ஆபத்தும் வராது.
இதனை கடந்த ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த அரசாங்கம் நாட்டுக்கு செய்த அநியாயத்தை மாற்றியமைக்கும் பொருட்டே, எமது ஆட்சியைக் கொண்டுவந்தார்கள்.
நாம் பயங்கரவாதத்தை தோற்கடித்தவுடன், ஐ.நா.வின் அன்றைய பொதுச் செயலாளர் இலங்கைக்கு வந்தார்.
ஆனால், நாம் அவருடன் அன்று எந்தவொரு ஒப்பந்தங்களையும் செய்துகொள்ளவில்லை. மாறாக இணைந்த பத்திரிகையாளர் மாநாடொன்றை நடத்தி, ஒருங்கிணைந்த கருத்துக்களை மட்டும்தான் வெளியிட்டோம்.
இதனை திரிபுபடுத்தி, சொந்த நாட்டுக்கு எதிராகவே கருத்து வெளியிடக்கூடாது. நாடாளுமன்றுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், சர்வதேசம் என்று வரும்போது நாம் அனைவரும் ஒன்றிணைந்துதான் ஒரு பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.