சவால்களால் நிறைந்துள்ள ‘2018’
In சிறப்புக் கட்டுரைகள் January 1, 2018 6:18 am GMT 0 Comments 4043 by : Varshini
பிறந்துள்ள 2018ஆம் ஆண்டு இலங்கையின் அரசியல் களத்தில் பல்வேறு சவால்களை கண்டு நிற்கப்போகின்றது என்பது திண்ணம்.
நீடிக்குமா நல்லாட்சி?
மைத்திரி – ரணில் நல்லாட்சி அரசாங்கம் நீடிக்குமா என்பதே தற்போது அனைவருக்கும் முன்பாகவுள்ள கேள்வியாகும். ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து மட்டத்திலும் தனி வழிசென்று ஆட்சி அமைக்க வேண்டும் என்ற விருப்பம் காணப்படுகின்றது என கடந்த வாரம் இலங்கையிலுள்ள வெளிநாட்டு ஊடவியலாளர்களுடனான சந்திப்பின் போது அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ பகிரங்கமாகவே அறிவித்திருந்தார். பிணை முறி விசாரணை அறிக்கை முடிவுகள் ஐக்கிய தேசியக்கட்சியினரையே அதிகமாக இலக்குவைத்துள்ளதாக நம்பப்படுவதால் ஜனாதிபதி சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனான நல்லாட்சி கூட்டணியை மீண்டும் புதுப்பிப்பதில் சிக்கல்களைத் தோற்றுவிக்கும் என்பது திண்ணமாகும்.
மறுமுனையில் பெப்ரவரி 10 திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் ஜனாதிபதி சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் அணியான பொதுஜன பெரமுன ஆகியவற்றிற்கு அடுத்து மூன்றாவது இடத்தைப் பெறுமிடத்து நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கான அழுத்தம் பன்மடங்காகும். ஏனெனில் மஹிந்தவின் கையோங்கிவிடின் ஜனாதிபதி சிறிசேனவின் பக்கமுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள உறுப்பினர்கள் மஹிந்த பக்கம் தாவுவதை தடுக்க முடியாமற்போய்விடும். தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையிலேயே பிரதி அமைச்சராக இருந்த நிமல் லன்ஸா ஜனாதிபதி அணியிலிருந்து வெளியேறியிருந்தார். அந்தவகையில் தேர்தலில் மைத்திரியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அணியை விடவும் மஹிந்தவின் ஸ்ரீ.சு.க. அணி சிறப்பாக செயற்பட்டால் மைத்திரி மீதான அழுத்தங்கள் அதிகரிக்கும்.
ஜெனிவா நெருக்கடி
மறுமுனையில் மார்ச் மாதத்தில் இலங்கை ஜெனிவாவில் மற்றுமொரு சவாலை எதிர்கொள்ள காத்திருக்கின்றது. 2015 ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் நிறைவேற்றப்படாத நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் இலங்கைக்கு இருவருட கால அவகாசம் வழங்கப்பட்டது.
எதிர்வரும் மார்ச்சுடன் ஒருவருட காலம் பூர்த்தியாகவுள்ள நிலையில் எதிர்பார்க்கப்பட்ட முக்கியமான விடயங்கள் பலவும் இன்னமும் பூர்த்திசெய்யப்படாத நிலையில் ஜெனிவாவில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பதில் இலங்கை தர்மசங்கட நிலையை எதிர்நோக்கும் என்பது நிச்சயமாகும். இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வென்பது உள்ளூராட்சித் தேர்தல்களால் மேலும் தாமதமடையும் என்பது நிச்சயம்.
ஆனால் நல்லாட்சி அரசாங்கத்திலுள்ள பிரதான கட்சிகள் தேர்தலின் பின்னர் தனிவழி போனால் கானல் நீராகவே போய்விடும். மனித உரிமைக்கு பெரும் அச்சுறுத்தலாக விளக்கும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாதொழித்து அதற்கு பதிலாக சர்வதேச நியமங்களுக்கு அமைவான சட்டமொன்றைக் கொண்டுவருவதாக வழங்கிய உறுதிமொழிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.
கடந்தவருடம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா. தூதுக்குழுக்களும் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுக்களும் இதுவிடயத்தில் தமது கவலைகளைத் தெரிவித்திருந்தன. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை வழங்கப்படுவதற்கான முக்கியமான நிபந்தனையாக பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம் அமைந்துள்ள நிலையில் நீண்ட காலத்திற்கு சாக்குப் போக்கு கூறி சமாளிக்க முடியாது.
பொருளாதார சிக்கல்கள்
இலங்கைக்கு வழங்கிய ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை இலங்கையின் பொருட்களுக்கான மிகப் பெரிய ஏற்றுமதிச் சந்தையான அமெரிக்கா நிறுத்திக்கொண்டுள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இழப்பது தள்ளாடிக் கொண்டிருக்கின்ற இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெரும் பின்னடைவாக அமையும்.
சீனாவிடம் இருந்து பெற்ற பெருந்தொகைக் கடன்களைத் திருப்பிப் கொடுப்பதற்கு வழியின்றி கடந்தாண்டில் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனாவிற்கு குத்தகைக்கு கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்ட இலங்கைக்கு இவ்வாண்டில் பல கடன்களுக்கான தவணைகளைச் திருப்பிச் செலுத்த வேண்டிய கடப்பாடு உள்ளது. இவ்வருடத்தில் இலங்கை 2,564 மில்லியன் அமெரிக்க டொலர்களை மொத்தமாக, கடன் மீள் செலுத்துகைக்காக வழங்க வேண்டும்.
அந்தவகையில் இலங்கை அரசியல் களத்திலும் சரி பொருளாதாரத்திலும் சரி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கடும் சவால்களுக்கு முகங்கொடுக்கும் ஆண்டாக 2018 அமையப்போவது திண்ணம்.
நிதர்சனன்
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.