சஹ்ரானின் மனைவி, மகள் அடையாளம் காணப்பட்டனர் – பொலிஸ்
In ஆசிரியர் தெரிவு April 28, 2019 12:27 pm GMT 0 Comments 3201 by : Jeyachandran Vithushan

கல்முனை தற்கொலை குண்டுவெடிப்பில் இருந்து காப்பாற்றப்பட்டவர்கள் சஹ்ரானின் மனைவி மற்றும் பிள்ளைகள் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரானின் மனைவி (அப்துல் காதர் பாத்திமா சாதியா) என்பதோடு காப்பாற்றப்பட்ட நான்கு வயது பெண் குழந்தை (மொஹமட் சாகர் ருஷைனா) அவரின் மகள் என்றும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேளை கல்முனை சாய்ந்தமருதில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள், குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானின் தந்தையும் சகோதரர்களுமென ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளால் கல்முனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலில் போது 26 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை இரவு பாதுகாப்பான வீட்டில் இருந்து துப்பாக்கி சூடு மற்றும் குண்டுவெடிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து 27 ஆம் திகதி சனிக்கிழமை காலை பாதுகாப்பு படையினரால் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி பாதுகாப்பான வீடுகளை சோதனையிடும் போது அந்த வீட்டில் இருந்து ஆண், பெண்கள் உட்பட சிறுவர்களின் 15 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து அந்த வீடடில் இருந்து காயங்களுக்குள்ளாக்கப்பட்ட 4 வயதுடைய சிறுமி மற்றும் பெண்ணொருவர் இராணுவத்தினரால் கல்முனை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.