சிங்கப்பூரைவிட முதலீடுகளைப் பெறும் நாடாக இலங்கையை மாற்றுவதே இலக்கு – ரணில்
இலங்கையை அடுத்த 5 வருடங்களுக்குள், சிங்கப்பூரைவிட முதலீடுகளைப் பெறும் நாடாக மாற்றுவதே அரசாங்கத்தின் ஒரே இலக்கு என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியல் இலக்குகள் வெவ்வேறாக இருந்தாலும் இந்தப் பயணத்தில் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “2015 ஆம் ஆண்டு நாம் எமது பயணத்தை, பொருளாதார ரீதியாக போட்டித் தன்மையுடன்தான் ஆரம்பித்தோம். முதலாவதாக ஜனநாயகம், நல்லிணக்கத்தை நாம் ஏற்படுத்த வேண்டும் என நினைத்தோம்.
இதனை நாம் வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டோம். அதேபோல், ஐக்கியத்தையும் பாதுகாக்க வேண்டும். இந்த பயணத்தை நாம் முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டும். எமது அரசியல் இலக்குகள் வெவ்வேறாக இருந்தாலும், நாட்டை முன்னேற்றும் நடவடிக்கைகளில் நாம் ஒன்றிணைய வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.
வடக்கில் இன்னும் பிரச்சினைகள் இருந்துக்கொண்டுதான் இருக்கின்றன. அங்குள்ளவர்களுக்கு வீடு வசதிகள், வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய முக்கிய பொறுப்பு எமக்குள்ளது. இந்த பயணத்தை நாம் கைவிடப்போவதில்லை. எமது அரசாங்கம் கடன் சுமைக்கு மத்தியில் தான் பயணித்துக்கொண்டிருக்கிறது. இருப்பினும் கல்வி, சுகாதாரத்திற்காக அதிகளவு பணத்தை நாம் வழங்கியுள்ளோம்.
இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டு வரலாற்று காலத்தில் இருந்ததைப்போல, இலங்கையை இந்து சமூகத்திரத்தின் கேந்திர நிலையமாக மாற்றுவதே எமது இலக்காகும். இதற்காகவே, சர்வதேச முதலீடுகளை ஊக்குவிக்க நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
எதிர்க்காலத்தில் இலங்கை கேந்திர நிலையமாக மாற்றப்படுமாக இருந்தால், ஒட்டுமொத்த மேல் மாகாணமும் பொருளாதார நகரமாக மாற்றமடையும். அவ்வாறு ஏற்பட்டால், 5 வருடங்களில் சிங்கப்பூரை விட அதிகளவிலான முதலீடுகளை எம்மால் பெற்றுக்கொள்ள முடியுமாக இருக்கும்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.