“சின்ன மாமி” பாடலுக்கு வயது ஐம்பது : லண்டன் வருகிறார் நித்தி

ஈழத்து பொப் இசையின் பிதாமகர் என்று வர்ணிக்கப்படும் டொக்டர் நித்தி கனகரத்தினம் எதிர்வரும் 27ம் திகதி நடைபெறவுள்ள லண்டன் பூபாள ராகங்கள் கலை நிகழ்ச்சியில் சிறப்புப் பாடகராகக் கலந்து கொள்வதற்காக லண்டன் வருகிறார். ‘சின்ன மாமி’ புகழ் என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் பேராசிரியர் நித்தி கனகரத்தினம் அந்தப் பாடலைப் பாட ஆரம்பித்து ஐம்பது ஆண்டுகள் நிறைவு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கம்பர்மலை வித்தியாலயம் – கொம்மந்தறை, பழைய மாணவர்கள் சங்கம் ஐக்கிய ராச்சியம் பத்தாவது முறையாக நடத்தும் லண்டன் பூபாள ராகங்கள் நிகழ்ச்சி இம்முறை சுபரா நிறுவனத்தின் பேராதரவுடன் ஹரோ ஆர்ட்ஸ் சென்டரில் (Harrow Arts Centre) நடைபெறவுள்ளது.
ஐம்பது ஆண்டுகளாக ஈழத் தமிழர்கள் மத்தியில் பிரபலம் குன்றாமல் இருக்கும் சின்ன மாமியே பாடலை இம்முறை லண்டன் பூபாள ராகங்கள் நிகழ்ச்சியில் நேரடியாகக் கேட்டுப் பார்த்து ரசிப்பதற்கான பெருவாய்ப்பு லண்டன் பூபாள ராகங்கள் நிகழ்ச்சி மூலமாக இசை ரசிகர்களுக்குக் கிடைத்துள்ளதாக பூபாள ராகங்கள் விழா அமைப்பாளரும் சுபரா நிறுவனத் தலைவருமான மகாலிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.
‘சின்ன மாமியே’ பாடல் பொன்விழா காணும் நிலையில் லண்டன் பூபாள ராகங்கள் நிகழ்ச்சியன்று பெரும் அளவில் வருகை தந்து ஈழத்து பொப் இசைப் பிதா பேராசிரியர் நித்தி கனகரத்தினம் அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்குமாறு பொப் இசை ரசிகர்களிடம் கம்பர்மலை வித்தியாலயம் – கொம்மந்தறை, பழைய மாணவர்கள் சங்கம் ஐக்கிய ராச்சியக் கிளை வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஐரோப்பாவின் புகழ் பூத்த இசைக்குழுவான துஷி, தனு சகோதரிகள் மற்றும் நண்பர்கள் வழங்கும் ‘கான மழை’யின் ஒரு பகுதியாக நித்தி கனகரத்தினம் ‘சின்ன மாமியே’ பாடலைப் பாடவுள்ளார்.
லண்டன் பூபாள ராகங்கள் நிகழ்ச்சியில் ராகினி ராஜகோபாலின் நாட்டியாலயா நடனப்பள்ளி மாணவர்கள் வழங்கும் ‘நாட்டியக் கலையரங்கம்’, பாலேந்திராவின் நெறியாள்கையில் தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகம் வழங்கும் ‘நீண்ட ஒரு பயணத்தில்’ நாடகம் முதலானவை இடம்பெறவுள்ளதோடு தாயகத்தில் இருந்து பிரபல பாடகர் என்.ரகுநாதன், கனடாவிலிருந்து சூப்பர் சிங்கர் புகழ் சரிகா நவநாதன் முதலானோரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளதாக பூபாள ராகங்கள் விழா அமைப்பாளரும் சுபரா நிறுவனத் தலைவருமான மகாலிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.