சிம்பாப்வே அதிபர் தேர்தலும் எழுப்பப்படும் சர்ச்சைகளும்
August 5, 2018 6:15 am GMT
உலக நாடுகள் அனைத்திலும் தேர்தல் வெற்றி என்பது அந்த நாட்டு மக்களின் வெற்றியாகவோ அல்லது நாட்டின் வெற்றியாகவோ பல தருணங்களில் அமைந்து விடுவதில்லை. அண்மையில் நடந்து முடிந்த ஆபிரிக்க கண்டத்தின் சிம்பாப்வே தேர்தலும், முடிந்தும் முடியாத சச்சரவு தேர்தலாகவே அமைந்திருக்கிறது.
‘நாட்டின் அதிகாரத்தை மீண்டும் கவ்விய முதலை’ என்ற வர்ணிப்புடனேயே வெற்றி பெற்ற மனங்வாவா அவர்களின் வெற்றி அந்த நாட்டில் வர்ணிக்கப்படுகிறது.
சிம்பாப்வேயின் அதிகாரத்தை 37 நீண்ட ஆண்டுகள் கைப்பிடியில் கொண்டிருந்து அண்மையில் பதவியிலிருந்து அகற்றப்பட்ட றொபேரட் முகாபேக்கு பின்னரான தேர்தல் என்ற வகையில் இந்ந தேர்தல் அரசியலில் முக்கியத்துவம் பெற்றிருந்தது.
சிம்பாப்வேயின் சுதந்திரத்திலும் அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கிய றொபேர்ட் முகாபே நீண்ட காலம் ஆட்சியை தொடர்வதற்கு உறுதுணையாக இருந்த இதே மனங்வாவா, கடந்த ஆண்டு வெற்றிகரமாக நடத்தி முடித்த மிக மென்மையான உள்வீட்டு சதி நடவடிக்கையால் அதிகாரத்தை கைப்பற்றி இருந்தார்.
அரசியல் சாணக்கியம் மிக்கவர்…சாதுர்யம் கொண்டவர் … நுட்பமாக விவகாரங்களை கையாள்வதில் திறமைசாலி…என சிம்பாப்வே அரசியலில் வர்ணிக்கப்பட்ட மனங்வாவா அதிகாரத்தை தொடர்வதற்காக போட்டியிட்ட தேர்தலாக இந்த தேர்தல் அமைந்திருந்தது.
சிம்பாப்வே என்ற நாடு உலகப்படத்தில் வரையப்பட்ட போது பிறந்த 40 வயதாகும் இளமைத் துடிப்புள்ள நெல்சன் சமீஸா, நாட்டின் புதிய அரசியல் சக்தியாக இந்த தேர்தலில் மனங்வாவாவுடன் மோதினார்.
அரசியல்வாதியாக, சட்டத்தரணியாக, சமூக சேவையாளராக, கத்தோலிக்க மதகுருவாக, சிறந்த மேடைப்பேச்சாளராக என பன்முக ஆளுமை கொண்ட சமீஸா 31 வயதிலேயே சிம்பாவே அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக பணிபுரிந்தவராவர்.
மிகவும் கவர்ச்சிகரமான வசீகரம் கொண்ட ஜனரஞ்சக இளந்தலைவராக உருவெடுத்திருக்கும் நெல்சன் சமீஸா சர்வதேசத்தால் தனிமைப்படுத்தப்பட்டு பொருளாதாரத்தில் நலிவடைந்து கிடக்கும் சிம்பாவ்வேயை சுபீட்சம் கொண்ட நாடாக கட்டியெழுப்பும் திட்டங்களோடு தேர்தலை எதிர் கொண்டிருந்தார்.
எனினும் 37 ஆண்டு கால றொபேர்ட் முகாபே ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சராக….. புலனாய்வு கட்டமைப்பின் தலைவராக… றொபேர்ட் முகாபே ஆட்சியை தொடர்வதற்கு மேற்கொள்ளப்பட்ட அனைத்து அராஜக எதேச்சிதிகார அடக்குமுறை நடவடிக்கைகளின் சூத்திரதாரியான மனங்வாவேயின் அனுபவ நகர்வுகளின் முன்பாக தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த முடியயுமா… என்ற சந்தேகம் அனைத்து தரப்பிலும் காணப்பட்டது.
தேர்தல் பரப்புரைகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றதுடன் மனங்வாவா பங்கேற்ற பொதுக்கூட்டமொன்றில் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டு அவர் மயிரிழையில் உயிர்த்தப்பியிருந்தார்.
சிம்பாப்வேயின் பதிவு செய்யப்பட்ட 50 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களில் 60 வீதத்துக்கும் அதிகமானவர்கள் இளம் வாக்காளர்கள் என்ற நிலையிலும் இளந்தலைவரான சமீஸாவின் கூட்டங்களில் இளைஞர்கள் பெருமளவில் கூடியதாலும் தேர்தலில் கடும் போட்டி நிலவியது. மனங்வாவாவுக்கு பெரும் சவாலாகவே சமிஸா காணப்பட்டார்.
நாடாளுமன்றத்துக்கும் அதிபர் பதவிக்கும் ஒரே நேரத்தில் கடந்த திங்களன்று வாக்குப்பதிவுகள் நடைபெற்ற போது 72 வீதத்துக்கும் அதிகமான மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர்.
கடந்த 2002ஆம் ஆண்டிற்குப் பின்னர் சிம்பாப்வே தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் முதல் தடவையாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் பணியாற்றியிருந்தார்கள்.
முகாபேயின் நடவடிக்கைகளால் அந்நியப்பட்டிருந்த சர்வதேச சக்திகளுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு மனங்வாவாவே இந்த தேர்தலை பயன்படுத்திக் கொண்டார்.
தேர்தலில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்துள்ளதாக பொதுநலவாய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் கருத்து வெளியிட்டிருந்த நிலையிலும் வாக்குப்பதிவு சுமூகமாக நடந்திருந்தது.
ஊடகங்களின் மாறுபட்ட நிலைப்பாடு, ஆளுங்கட்சிக்கு சார்பான அரச ஊடகங்களின் செயற்பாடு, வாக்காளர்கள் மீதான அச்சுறுத்தல் போன்ற நடவடிக்கைகளை கண்காணிப்புக்குழு சுட்டிக்காட்டியிருந்தது.
நம்பகத்தன்மை பெரிதும் முக்கியமாக உள்ள தேர்தல் நடவடிக்கைகளில் வாக்களிப்பின் போது பாரிய வன் சம்பவங்கள் நிகழாத போதிலும் தேர்தல் விதிமுறைகளுக்கு முரணான பல நடவடிக்கைகள் இடம்பெற்றதான முறைப்பாடுகள் ஏராளமாக பதிவாகியிருந்தன.
வாக்குப்பதிவை தொடர்ந்து ஆங்காங்கே வன் சம்பவங்கள் தலைதூக்கவும் பல இடங்களில் பதற்றம் நிலவி தலைநகர் ஹராரேயிலும் ஏனைய இடங்களிலும் படையினர் பெரும் எண்ணிக்கையில் குவிக்கபப்பட்டனர்.
தலைநகரத்தை பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கத்துடன் வன் சம்பவங்கள் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டன என்ற சந்தேகம் எதிர்க்கட்சி தரப்பிலிருந்து வெளியானது.
அதி கூடுதலான வாக்குப்பதிவும் இளம் வாக்காளர்களின் அக்கறையான பங்களிப்பும் தமக்கு சாதகமாக இருப்பதை உணர்ந்த நெல்சன் சமிஸா, வெற்றி தமதே என்றும் பெரும் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு தயாராகுமாறும் ஆதரவாளர்களுக்கு அறிவித்தார்.
தேர்தல் முடிவுகள் அறிவிப்பது தாமதமானது. அதாவது தேர்தல் முடிவை வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையகம் தாமதித்து கூடுலான கால அவகாசம் எடுத்துக் கொண்டது. இதற்கான காரணம் குறித்து கேள்வியெழுப்ப வேண்டியுள்ளது என்றும் இவ்வாறான நிலையில் வெளியாகும் தேர்தல் முடிவின் நம்பகத்தன்மை சந்தேகத்துக்கிடமானது என்றும் கண்டனங்கள் எழுந்தன.
தேர்தல் முடிவுகள் தாமதமாக பதற்றம் அதிகரித்து, பிரதான எதிர்க்கட்சியான நெல்சன் சமிஸாவின் தலைமைக் காரியாலயம் சீல் வைத்து மூடப்படடது. வன்முறையை கட்டுப்படுத்தும் நடவடிக்கை என்று கூறி அதன் பணிமனையை முற்றுகையிட்ட பாதுகாப்பு படையினர் வியாழக்கிழமை பணிமனையை மூடினார்கள்.
தேர்தலில் அரசு முறைகேடாக நடந்து கொண்டதை ஆட்சேபித்து எதிர்க்கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூவர் கொல்லப்பட்டனர்.
தொடர்ந்து தலைநகர் ஹராரேயை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த இராணுவத்தினர் நகர மத்தியில் இருந்து பொதுமக்களை வெளியேறுமாறு பணித்ததுடன் வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு உத்தரவிட்டனர்.
தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகளை ஏற்படுத்தி பொய்யான முடிவை அறிவிப்பதற்காக காலம் தாமதமாவதாக நெல்சன் சமிஸா குற்றஞ்சாட்டியதுடன் திட்டமிட்டு வன்முறையை கட்டவிழ்த்து விட்டு நாட்டை இறுக்கமான பதற்ற நிலைக்குள் கொண்டு வந்திருப்பதாகவும் அரசை கடுமையாக சாடினார்.
வியாழன் இரவு முடிவு அறிவிக்கப்பட்டது. ஏமர்சன் மனங்வாவா 50.8 வீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக அறிவித்த தேர்தல் ஆணையம் நெல்சன் ஸமிஸாவுக்கு 44.3 சதவீத வாக்குகள் கிடைத்ததாக கூறியது.
50 வீதத்திற்கு சற்று அதிகமான வாக்குகளை பெற்ற காரணத்தால் சமிஸாவுடன் இரண்டாம் கட்ட மோதலை எதிர்கொள்ள வேண்டிய தேவையை மனங்வாவா தவிர்த்துக் கொண்டார். தேர்தலில் எமர்சன் மனங்வாவாவின் கட்சி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்க்கட்சி ஏற்க மறுத்தது.
தேர்தல் முடிவு உண்மையானதாகவும் நேர்மையானதாகவும் அமைந்தால் மக்களே வெற்றிபெற்றிருக்க வேண்டும் என்றும் சுதந்திரத்திற்காகவும் ஜனநாயகத்திற்காகவும் புதிய சிம்பாப்வேயிற்காகவும் நடைபெற்ற தேர்தலில் மக்கள் மீண்டுமொரு திட்டமிட்ட சதியால் தோற்கடிக்கப்பட்டதாகவும் சமிஸா கொந்தளித்தார்.
மக்களின் உரிமைகளையும் ஜனநாயகத்தையும் வென்றெடுப்பதற்காக தேர்தல் முடிவுகளை எதிர்த்து மறுதலித்து அனைத்து சட்டரீதியான வழிகளிலும் தேசிய மீட்புக் கட்சி போராடும் என்று அதன் தலைவரும் சட்டதரணியுமான சமிஸா சூளுரைத்தார்.
சிம்பாப்வேக்கு தலைமை தாங்க சமிஸாவே பொருத்தமானவரென்று சிம்பாப்வே சுதந்திரம் பெற்ற நாள் முதல் ஆட்சிசெய்து வந்த றொபர்ட் முகாபேயும் வழிமொழிந்திருந்த நிலையில் நாட்டை சுபீட்ச பாதையில் இட்டுச் செல்ல சமிஸாவின் பங்களிப்பு அவசியம் என்று அதிபராக தெரிவான எமர்சன் மனங்வாவா விடுத்த அழைப்பையும் சமிஸா நிராகரித்தார்.
வாக்குகள் நிறைந்த பெட்டிகள் திறந்த வாகனங்களில் பாதுகாப்பின்றி எடுத்துச் செல்லப்பட்டதற்கான ஆதாரங்களும் பொய்யான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்களும் ஏராளமாக இருப்பதாகவும் கூறும் சமீஸா இந்த தேர்தல் முடிவுகள் முறைகேடானதென்று விரைவில் நிரூபிக்கப்படும் என்கிறார்.
தேர்தல் முறைகேடுகளை இன்னும் விபரிக்கும் நெல்சன் சமீஸா தற்போதைய அதிபர் மனங்வாவா 2460463 வாக்குகள் பெற்றதாகவும் தமக்கு 2147436 வாக்குகள் பதிவானதாகவும் குறிப்பிடும் தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் ஒரே நேரத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் வாக்குகளுடன் ஒத்துப்போகாதிருப்பதையும் பதிவான வாக்கு எண்ணிக்கைக்கும் வெளியான முடிவுகளுககும் இடையே பாரிய வேறுபாடு காணப்படுவதையும் சுட்டிக்காட்டுகிறார்.
சிம்பாப்வே அரசியலில் மறுக்கமுடியாத சக்தியாக விளங்கிய றொபேர்ட் முகாபேயின் நீடித்த ஆட்சியின் பின்புலமாகவும் அவரது பாதுகாப்பு அரணாகவும் விளங்கிய அனுபவ முதிர்ச்சி கொண்டவரும் கண்டிப்பு…. புத்திக்கூர்மை….. நிதானமான போக்கு கொண்ட அரசியல்வாதியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் எமர்சன் மனங்வாவா நாட்டை செழிப்பான பாதையில் இட்டுச்செல்வார் என்ற நம்பிக்கை பெரும்பாலான சிம்பாவ்வே மக்கள் மனங்களில் இல்லாமல் இல்லை.
இருப்பினும் றொபேர்ட் முகாபே முறைகேடாக அதிகாரத்தை தக்கவைப்பதற்கு அவசியமான அனைத்து வழிவகைகளையும் ஏற்படுத்தி அதை நடைமுறைப்படுத்த தனது ஆற்றலை முழுமையாக செலுத்திய மனங்வாவா அதிகாரத்தை தானே தொடர்வதற்காக நடந்து முடிந்த தேர்தலை நெறிப்படுத்தியிருப்பார் என்ற சந்தேகமே மேலோங்கி இருக்கிறது.
முகாபே பாணியில் ஆட்சியை தொடரப்போகும் மனங்வாவா, நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுத்து மக்கள் மத்தியில் தலைவர் என்ற செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்வதிலும் இளம் அரசியல் புயலான நெல்சன் சமிஸா முனையிலிருந்து கிளம்ப இருக்கும் அரசியல் நெருக்கடிகளினாலும் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
-
அமெரிக்கத் திமிங்கிலமா… – சீனாவின் ஒக்டோபசா..?
-சாந்த நேசன்- முறிவடைந்து விட்ட அமெரிக்க அதிபர் டொ...
-
முதலாம் உலகப்போர் நூற்றாண்டில் கௌரவிக்கப்பட்ட வீரர்கள்
உலகமெல்லாம் கடந்த வாரம் கொண்டாடப்பட்ட முதலாம் உலகப...