சிறைச்சாலை மோதல் போன்று எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க அரசாங்கம் வழங்கும் உத்தரவாதம் என்ன?- அநுர
In இலங்கை December 1, 2020 11:10 am GMT 0 Comments 1395 by : Yuganthini
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தைப் போன்று எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க அரசாங்கம் வழங்கும் உத்தரவாதம் என்ன என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) 27 இன் கீழ் இரண்டாம் நிலையியற் கட்டளையின் கீழ் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அநுரகுமார திஸாநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையைக் கட்டுப்படுத்த, பாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கைதிகள் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளனர்.
அரசாங்கத்தின் பொறுப்பில் உள்ளவர்களே இவ்வாறு உயிரிழந்தும் காயமடைந்தும் உள்ளார்கள். கைதிகள் தப்பிச் செல்ல முற்பட்டதாலேயே இந்த வன்முறைச்சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.
எனினும், இதன் பின்னணியின் உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என்பதுதான் எமது நோக்கமாகும். சிறைச்சாலைகளில் இடப்பற்றாக்குறை நிலவுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மஹர சிறைச்சாலையில் 80 வீதத்திற்கும் அதிகமானோர் விளக்கமறியல் கைதிகள் என்றுக் கூறப்படுகிறது. நேற்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 40 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ரெப்பிட் என்டிஜன் பரிசோதனையில் 26 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனைப் பார்க்கையில், அந்தச் சிறைச்சாலையில் 70 வீதமானோருக்கு வைரஸ் தொற்று இருக்கலாம் என்றே தெரிகிறது. சிறைச்சாலைகளில் இடப்பற்றாக்குறை நிலவும் இந்தத் தருணத்தில், 11 மாதங்களுக்கு மேலாக வழக்குகளும் விசாரிக்கப்படவில்லை.
அத்தோடு, தங்களுக்கு பி.சி.ஆர்.பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறுதான் கைதிகள் வலியுறுத்தி, பிரச்சினையில் ஈடுபட்டுள்ளார்கள். இதனை அரசாங்கம் முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும். இது மிலேச்சத்தனமானதொரு செயற்பாடாகும்.
இதுபோன்ற சம்பவங்கள் எதிர்க்காலத்தில் இடம்பெறாமல் இருக்க அரசாங்கம் மேற்கொள்ளப்போகும் நடவடிக்கை என்ன? சிறைச்சாலைகளில் இருக்கும் இடநெருக்கடியை இல்லாது செய்ய அரசாங்கம் என்ன செய்யவுள்ளது? என்பதை நாம் கேட்க விரும்புகிறோம்.
அத்தோடு, இறந்தவர்கள் தொடர்பாக உடற்கூற்றுப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட வேண்டும் என நாம் கேட்டுக் கொள்கிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.