சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கு தொடர்பாக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீண்டும் ஜுலை 31ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு இன்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இர்ஸடீன் முன்னிலையில் நடைபெற்றது.
இன்றைய அமர்வில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் வழக்கினை நீதிபதி ஜுலை 31ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
கடந்த 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி நத்தார் தினத்தன்று நள்ளிரவு ஆதாரனையின் போது மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் வைத்து ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம், இராணுவப்புலனாய்வு உத்தியோகத்தர் எம்.கலீல் மற்றும் முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.