சீனாவின் கொரோனா தடுப்பூசி 86 சதவீதம் செயற்திறன் கொண்டது: ஐக்கிய அரபு அமீரகம் மதிப்பீடு!

பரிசோதனை கட்டத்தில் இருக்கும் சீனாவின் ‘சினோஃபார்ம்’ எனப்படும் கொரோனா தடுப்பூசி, 86 சதவீதம் செயற்திறன் கொண்டதாக ஐக்கிய அரபு அமீரகம் மதிப்பீடு செய்துள்ளது.
சீனாவின் கொரோனா தடுப்பு மருந்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் மூன்றாம் கட்ட பரிசோதனையில் இருக்கிறது.
சீனாவின் தேசிய மருந்துக் குழு நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தான சினோஃபார்ம், எந்தவித ஆபத்தையும் ஏற்படுத்தவில்லை என பரிசோதனையில் தெரிவதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், சினோபார்ம் நிறுவனமோ அல்லது ஐக்கிய அரபு அமீரகமோ, 31,000 பேரிடம் நடத்திய கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை சோதனை குறித்த விரிவான தரவுகளை வெளியிடவில்லை.
இந்த தடுப்பு மருந்து பரிசோதனையில் பங்கெடுத்தவர்களில், எத்தனை பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது? எத்தனை பேருக்கு மருந்து போலத் தோன்றும் வெற்றுத் திரவம் செலுத்தப்பட்டது என்பது போன்ற விபரங்கள் குறிப்பிடப்படவில்லை. அதே போல பக்க விளைவுகளைப் பற்றியும் விபரங்கள் இல்லை.
சினோபார்மின் கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டவர்களில், 99 சதவீதத்தினரின் உடலில் ஆன்டி பாடி எனப்படும் எதிர்ப்பான்கள் உருவாக்கப்பட்டு, கொரோனா வைரசுடன் போராடுவதாக, ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக, கூறப்பட்டுள்ளது.
இந்த மருந்தை எடுத்துக் கொண்ட பின் யாரும் கடுமையாகவோ அல்லது மிதமாகவோ கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.