சீரற்ற காலநிலை- கிளிநொச்சியில் இதுவரை 5,000இற்கு மேற்பட்டோர் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆயிரத்து 846 குடும்பங்களைச் சேர்ந்த ஐயாயிரத்து 439 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையப் புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.
இதன்படி, இன்று (சனிக்கிழமை) மாலை நான்கு மணி வரை திரட்டப்பட்ட புள்ளி விபரங்களின் அடிப்படையில் மூன்று வீடுகள் முழுமையாகவும், 273 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இரண்டு பாதுகாப்பு அமைவிடங்களில் 88 குடும்பங்களைச் சேர்ந்த 134 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையப் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 650 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்து 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 38 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 249 குடும்பங்களைச் சேர்ந்த 676 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஏழு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 654 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 788 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதுடன் மூன்று வீடுகள் முழுையாகவும், 194 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
அத்துடன், இரணைதீவில் அனர்த்தத்தினால் சிக்கியுள்ள 88 குடும்பங்களைச் சேர்ந்த 134 பேர் தொடர்ந்தும் இரண்டு பாதுகாப்பு அமைவிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 293 குடும்பங்களைச் சேர்ந்த 963 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 34 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில், பாதிக்கபபட்ட மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய தேவைகளை அந்தந்த பிரதேச செயலகங்கள் ஊடாக பூர்த்தி செய்யப்பட்டு வருவதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.