சுதந்திர இந்தியாவே வெறுக்கும் ஒருவரே பிரதமர் பதவியில் உள்ளார் – மம்தா

சுதந்திர இந்தியாவே வெறுக்கும் ஒருவரே தற்போது பிரதமர் பதவியில் உள்ளார் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
அத்துடன், மத்திய அரசின் நிறுவனங்களை ஏவி தங்கள் அரசியல் எதிரிகளை பழி தீர்க்கும் செயற்பாடுகளையே மோடி செய்துவருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் தூத்துக்குடி இல்லம் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
இது குறித்து மேற்குவங்க மாநிலத்தில் இன்று (புதன்கிழமை) நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரதமர் என்பவர் மக்களால் விரும்பத்தக்கவராக, அன்பு செலுத்துக்கூடியவராக இருக்க வேண்டும். ஆனால் நமது நாட்டின் துரதிர்ஷ்டம் சுதந்திர இந்தியாவிலேயே வெறுக்கத்தக்க ஒரு மனிதர் தற்போது பிரதமர் பதவியில் உள்ளார். மத்திய அரசின் நிறுவனங்களை ஏவி தங்கள் அரசியல் எதிரிகளை பழி தீர்ப்பதை அவர் தொடர்ச்சியாக செய்து வருகிறார்.
தி.மு.க. சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழியின் தொடர்புடைய இடங்களில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இதற்கு ஒரே காரணம் கனிமொழி, பா.ஜ.க.வையும், பிரதமர் மோடியையும் தொடர்ச்சியாக எதிர்த்து, அவர்களது கொள்கைகளை விமர்சிப்பதேயாகும்.
இந்த ஒரு காரணத்துக்காகவே அவர் மீது அதிகாரத்தை மத்திய அரசு கட்டவிழுத்து விடுகிறது. இதற்கு தேர்தல் ஆணையகமும் துணை புரிகிறது. நாடு முழுவதுமே பா.ஜ.க.வை எதிர்ப்பவர்களுக்கு எதிராக அரசு இயந்திரம் அத்துமீறல்களில் ஈடுபடுகிறது. தேர்தலில் மக்கள் பா.ஜ.க.வினருக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்” அன்று அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.