சூடான் இடைக்கால இராணுவ சபையின் தலைவர் இராஜிநாமா!
சூடான் இடைக்கால இராணுவச் சபையின் தலைமை பதவியிலிருந்து அவாட் மொஹமட் அஹ்மெட் இபின் ஓப் இராஜிநாமா செய்துள்ளார்.
சூடான் பாதுகாப்பு அமைச்சராக பதவிகிக்கும் அவர், தற்போது அமைக்கப்பட்டுள்ள இடைக்கால இராணு சபைக்கு தலைவராக நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அப்பதவியிலிருந்து விலகுவதாக நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை அறிவித்துள்ளார்.
அப்பதவிக்கு தன்னைவிட அனுபவமுள்ள ஈடுகொடுக்கக்கூடிய லெப்டினன்ட் ஜெனரல் அப்தெல் பட்டா புர்ஹான் அப்தெல் ரஹ்மானை நியமிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இடைக்கால இராணுவச் சபையை திறம்பட முன்னெடுத்துச் செல்லும் இயலுமை அவருக்கு உண்டு என்றும், உயர்மட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் தாம் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்தோடு, இடைக்கால இராணுவச் சபையின் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் கமால் அப்துல் முரொஃப் அல் மஹி பஷிரும் பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.
சூடானில் கடந்த மூன்று தசாப்தங்களாக நீடித்த ஜனாதிபதி ஒமர் அல் பஷீரின் ஆட்சி கடந்த 11ஆம் திகதி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அவரை கைதுசெய்த இராணுவம், இடைக்கால இராணுவ சபையை அமைத்து நாட்டின் ஆட்சியை கொண்டுசெல்கின்றது. விரைவில் தேர்தல் நடத்தி எதிர்வரும் 2 வருடங்களுக்கு ஆட்சியில் நீடிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
எனினும், தற்போதைய இராணுவச் சபையானது, ஜனாதிபதி ஒமருக்கு மிகவும் நெருக்கமானதென சூடான் மக்கள் தெரிவிக்கின்றனர். அதனால் தொடர்ந்தும் வீதிகளில் திரண்டுள்ள மக்கள், இராணுவச் சபை மக்கள் மயப்படுத்தப்பட்டதாக அமையவேண்டுமென கோரி வருகின்றனர். அதுவரை வீதிகளை விட்டு செல்லமாட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், பதவியேற்ற மறுநாளே இரு முக்கிய அதிகாரிகள் வெளியேறியுள்ளனர். இது மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியென சூடான் அமைப்பொன்று குறிப்பிட்டுள்ளது. குறித்த இரு அதிகாரிகளின் பதவி விலகலைத் தொடர்ந்து மக்கள் வீதிகளில் கொண்டாடி வருகின்றனர்.
கடந்த 2000ஆம் ஆண்டு ஏற்பட்ட தர்ஃபுர் கிளர்ச்சியின்போது, பாதுகாப்பு அமைச்சர் அவாட் மொஹமட் அஹ்மெட் இபின் ஓப் இராணுவ புலனாய்வு பிரிவின் பிரதானியாக செயற்பட்டார். கடந்த 2007ஆம் ஆண்டு அமெரிக்கா அவருக்கு எதிராக தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தற்போது இடைக்கால இராணுவ சபையின் தலைவராக பதவியேற்;றுள்ள அப்தெல் பட்டாவும் இராணுவத்தின் உயர் அதிகாரியாவார். ஆனால், அவரின் கடந்தகால செயற்பாடுகள், ஏனையவர்களை விட சிறந்ததென அசோசியேட் பிரெஸ் நியூஸ் ஏஜென்ஸி தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.