செங்கலடி பிரதேசசபை உறுப்பினர்கள் சபை முன் எதிர்ப்பு நடவடிக்கையில்!
In இலங்கை December 18, 2020 4:50 am GMT 0 Comments 1337 by : Yuganthini

மட்டக்களப்பு– ஏறாவூர்பற்று, செங்கலடி பிரதேசசபை அமர்வை புறக்கணித்து, உறுப்பினர்கள் சபை நடவடிக்கையில் கலந்துகொள்ளாது எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
31 சபை உறுப்பினர்களைக் கொண்ட செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் நாகமணி கதிரவேலு தலைமையில் பிரதேச சபையின் 36வது மாதாந்த அமர்வானது கூடவிருந்த நிலையில், சபை நடவடிக்கைகளில் கலந்துகொள்ளாது சபை முன் பிரதித்தவிசாளர் உள்ளிட்ட 23 உறுப்பினர்கள் நேற்று (வியாழக்கிழமை) எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதாவது, நேற்றைய (வியாழக்கிழமை) சபை அமர்விற்கான அழைப்பிதழ் புதன்கிழமை காலைதான் அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டதாகவும், பிரதேச சபை சட்டத்தின்படி நான்கு நாட்களுக்கு முன் அறிவிக்கப்படவேண்டும் என்றும், இருப்பினும் பிரதேச சபையின் செயலாளர் எங்களை முட்டாள் என்கின்ற நிலைக்கு நடாத்திக்கொண்டிருக்கின்றார் என அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மேலும், தவிசாளர் மற்றும் செயலாளரை நீக்கவேண்டும் எனவும் நான்கு நாட்களுக்கு முதல் அழைப்பிதல் கிடைக்காததன் காரணமாக, பிரதேச சபை சட்டத்தின் பிரகாரம் நாங்கள் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளோம் எனவும் உள்ளூராட்சி ஆணையாளர்கள் இதற்குரிய சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியே எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த எதிர்ப்பு நடைபெற்றிருக்கும்போது, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஜனநாஜக தேசிய கட்சியின் ஒரு உறுப்பினர் கூட்டத்திற்கு சென்றிருந்ததனால் நேற்றைய அமர்வில் கோரம் இன்மையால் ஒத்திவைக்கப்பட்டது.
இதேவேளை கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனநாஜக தேசிய இயக்க கட்சியின் உறுப்பினருக்கும், எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
இதேவேளை நேற்றைய அமர்வின் ஒத்திவைப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த தவிசாளர் நாகமணி கதிரவேல், “கூட்டத்திற்கான கடிதம் நேரத்திற்கு கிடைக்காமையினால், குறித்த உறுப்பினர்கள் வருகை தந்திருந்தும் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
தபாலக செயற்பாடுகள் தாமதமடைந்திருப்பதால் கடிதங்களை எமது அலுவலக ஊழியர்கள் மூலம் வழங்கியிருந்தோம்.
இவர்களுக்கு ஏதும் பிரச்சினை இருந்தால், தவிசாளராகிய என்னிடம் பேசி இதைத் தீர்த்திருக்கலாம். அதைவிடுத்து பொதுமக்களுக்கு 24மணிநேரம் சேவை செய்ய வந்தவர்கள் இவ்வாறு கூச்சிலிட்டுச் சென்றனர். ஆகவே விரைவில் அடுத்த கூட்டத்தை கூட்டுவதற்கு தீர்மானித்துள்ளேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.