செஞ்சோலை காணி விடயத்தில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்
In ஆசிரியர் தெரிவு April 11, 2019 9:20 am GMT 0 Comments 2771 by : Litharsan
கிளிநொச்சியில் இடம்பெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் செஞ்சோலை காணி விடயம் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
குறித்த காணியை செஞ்சோலை பிள்ளைகளுக்கே பகிர்ந்தளிக்கும் வகையில் மாவட்ட அபிவிருத்தி குழுவினால் இன்று (வியாழக்கிழமை) தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
விடுதலைப் புலிகளின் காலத்தில் செஞ்சோலை மற்றும் காந்தரூபன் அறிவுச்சோலையில் இருந்து வளர்ந்த பிள்ளைகள், யுத்தத்தின் பின்னர் எவ்வித பாதுகாப்பும் இன்றி வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது மலையாளபுரம் பகுதியில் படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லம் அமைந்திருந்த காணியில், தற்போது 64 பிள்ளைகள், குடும்பங்களாகிய நிலையில் கொட்டகைகள் அமைத்து அங்கு வாழ்கின்றனர்.
அவர்களுக்கு குறித்த காணியை பகிர்ந்தளிப்பதற்கு மாவட்ட அபிவிருத்திக் குழு தீர்மானம் நிறைவேற்றியது.
குறித்த காணியை 13 உரிமையாளர்கள் தமது காணி என தெரிவித்து ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதாகவும், யாருக்கு குறித்த காணியை பகிர்ந்தளிப்பதென்ற நிலையில் உள்ளதாகவும் அரச அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
எனினும் குறித்த காணி விடுதலைப் புலிகளால் பணம் கொடுத்து வாங்கப்பட்டதாகவும், அந்தக் காணியை உரிமை கோருபவர்களுக்கு வேறு காணிகளும் உள்ளமையால் அதை செஞ்சோலை பிள்ளைகளுக்கே வழங்க வேண்டும் எனவும் காணி உரிமை கோருபவர்களுக்கு வேறு காணி வழங்கலாம் எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.