சென்னை கிறிஸ்தவ தேவாலயங்களில் பாதுகாப்பு தீவிரம்
In இந்தியா April 22, 2019 1:52 pm GMT 0 Comments 2257 by : adminsrilanka

இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சென்னையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களின் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பு தயார் படுத்தப்பட்டுள்ளன.
வேளாங்கண்ணி ஆலயத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இராமேஸ்வரம், தனுஷ் கோடி ஆகிய பகுதிகளில் இந்திய கடற்படை, கடலோர காவல்படையினர் 24 மணி நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கையிலிருந்து பயங்கரவாதிகள், மன்னார் வளைகுடா வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவாமல் தடுப்பதற்காக இந்திய கடலோர காவல் படையினர் ஹெலிகொப்டரிலும் ரோந்து சுற்றி வருகின்றனர்.
இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோயிலில் கூடுதல் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோயிலுக்கு வரும் பக்தர்களின் உடமைகள் தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றது. அதேநேரம், இராமேஸ்வரம் ரயில் நிலையம், பேருந்து நிலையம் பாம்பன் உள்ளிட்ட பகுதிகளிலும் பொலிஸார் ரோந்து சுற்றி வருகின்றனர். மாநிலம் முழுவதும் தேவாலயங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
எழும்பூர், அண்ணாநகர், அயனாவரம், புரசைவாக்கம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நுங்கம்பாக்கக்தில் உள்ள இலங்கை தூதரகம், ஏயார் லைன்ஸ் அலுவலகம் ஆகியவற்றில் தொடர்ந்தும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இந்த இரண்டு இடங்களில் கூடுதல் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம், எழும்பூரில் உள்ள புத்த மட அலுவலகத்திலும் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.