சென்னை சுப்பர் கிங்ஸ் அணியிலிருந்து முக்கிய வீரர் விலகல்!
ஐ.பி.எல். தொடரில் நடப்பு சம்பியனான சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. ஆம்! அணியின் நட்சத்திர சகலதுறை வீரரான கேதர் ஜாதவ், உபாதைக்குள்ளாகியுள்ளார்.
சென்னை சுப்பர் கிங்ஸ் அணி விளையாடிய இறுதி லீக் போட்டியான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில், கேதர் ஜாதவ், 14ஆவது ஓவரில் பந்தை தடுக்க பாய்ந்த போது இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து, வலியால் அவதிப்பட்ட அவர் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார். அதன் பிறகு மீண்டும் அவர் களத்தடுப்பு செய்ய வரவில்லை.
எனினும் தற்போது அவரின் காயத்தன்மை குறித்து எவ்வித தகவலும் இல்லாத நிலையில், ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவரின் நிலைக்கு குறித்து அறியத்தரப்படும் என சென்னை சுப்பர் கிங்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எனினும், 34 வயதான கேதர் ஜாதவ், பிளே ஓஃப் சுற்றில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவு என எதிர்பார்க்கப்படுகின்றது.
உலகக்கிண்ண தொடர் ஆரம்பமாவதற்கு இன்னமும் 24 நாட்களே உள்ள நிலையில், கேதர் ஜாதவுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று தெரிகிறது.
இதுகுறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறுகையில், “ஜாதவின் காயத்துக்கு எக்ஸ்ரேவும் ஸ்கேனும் எடுக்கப்படும். நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம். எனினும் அவர் இந்த வருட ஐ.பி.எல் தொடரில் மீண்டும் பங்கேற்பார் என எண்ணவில்லை.
அவருடைய கவனம் இனி உலகக் கிண்ண தொடரில் நல்ல உடற்தகுதியுடன் பங்கேற்பது குறித்து இருக்கும். காயம் தீவிரமாக இல்லையென்றாலும் இப்போது அதன் நிலை சரியாக இல்லை” என கூறினார்.
மொஹாலியில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், பஞ்சாப் அணியிடம் சென்னை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.
கேதர் ஜாதவ் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரிலும் உபாதைக் காரணமாக தொடரின் இடைநடுவே விலகியிருந்தார் என்பது நினைவுக்கூரத்தக்கது.
சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, பிளே ஓஃப் சுற்றின் முதல் இறுதிப் போட்டிக்கான தகுதி சுற்று போட்டியில், நாளை மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.