சென்னை ரயில் ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது

சென்னையில் மெட்ரோ ரயில் ஊழியர்கள் கடந்த 3 நாட்களாக நடத்திவந்த வேலை நிறுத்தப் போராட்டம் இன்று (புதன்கிழமை) இரவுடன் முடிவுக்கு வந்தது.
தொழிலாளர் நல ஆணையர், மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியதில் ஏற்பட்ட இணக்கப்பாட்டினைத் தொடர்ந்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் நிறைவுபெற்றது.
சென்னையில் மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு எதிராக செயற்பட்டதாக 7 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். கடந்த டிசம்பர் மாதம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு ஊழியர்கள் விளக்கம் அளிக்கலாம் என்றும் துறை ரீதியாக கேட்கப்பட்டது.
இதற்கு ஊழியர்கள் அளித்த விளக்கத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து 7 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவர்கள் நிர்வாக இயக்கநரை சந்தித்து முறையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நிர்வாக இயக்குநரை சந்தித்து ஊழியர்கள் முறையிடவில்லை.
இதற்கிடையே, மெட்ரோ ரயில் நிர்வாக ஊழியர்கள் நேற்று கோயம்பேட்டில் உள்ள தலைமை நிர்வாக அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு அலுவலகத்துக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன், தொழிலாளிகளர்களின் பிரச்சனையை தீர்க்கும் வகையில் நேற்று சென்னையில் தொழிலாளர் நல ஆணையர் ஜானகிராமன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும் இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இதற்கிடையில், இன்று 3 ஊழியர்களை இடைநீக்கம் செய்வதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்ததால் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்து நீடிக்கும் என அஞ்சப்பட்டது.
இந்நிலையில், தொழிலாளர் நல ஆணையர், மெட்ரோ ரெயில் நிர்வாகத்தினர் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியதில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.