ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள் – தலைமை தேர்தல் ஆணையாளர் வலியுறுத்தல்!

வாக்காளர்கள் அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா வலியுறுத்தியுள்ளனர்.
மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை ஆரம்பமாகியுள்ள நிலையில் தற்போது இடம்பெற்று வருகின்றது.
543 தொகுதிகளைக் கொண்ட இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகின்றது. முதல் கட்ட மக்களவை தேர்தலில் மொத்தம் ஆயிரத்து 279 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகின்றது.
இதில் ஆந்திராவிலுள்ள 25 தொகுதிகளும், தெலங்கானாவில் உள்ள 17 தொகுதிகளும் ஒரே கட்டமாகத் தேர்தலைச் சந்திக்கின்றன. அதில் அதிகபட்சமாக தெலங்கானாவில் இருந்து 443 வேட்பாளர்களும் ஆந்திராவில் இருந்து 319 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
குறைந்த பட்சமாக லட்சத்தீவில் 6 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். முதல் கட்டத் தேர்தலில் மொத்தம் 14 கோடியே 22 இலட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்யவுள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 664 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா வலியுறுத்தியுள்ளார்.
முதன்முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.