ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு அனுமதி!
In இந்தியா December 23, 2020 8:27 am GMT 0 Comments 1447 by : Krushnamoorthy Dushanthini

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு போட்டிகளை கட்டுப்பாடுகளுடன் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இது குறித்து தமிழக அரசு தெரிவிக்கையில், “ ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 வரையில் பங்குபெற்றலாம். எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திறந்த வெளியின் அளவிற்கேற்ப சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அதிகபட்சம் 50 சதவிகித அளவிற்கு மிகாமல் பார்வையாளர்கள் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது.
பார்வையாளர்களுக்கு வெப்ப பரிசோதனை (தெர்மல் ஸ்கேனிங்) செய்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடுபிடி வீரர்களாக பங்கேற்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைக்கூடத்தில் கோவிட்-19 தொற்று இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும்.
மேலும் நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிவதும் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயமாக்கப்படுகிறது.
இதற்கான விரிவான, நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.