ஜெனிவாவில் இம்முறை தமிழர்களுக்கு தீர்வு கிடைக்குமென்ற நம்பிக்கை எழுந்துள்ளது- ஞா.சிறிநேசன்
In இலங்கை January 29, 2021 5:21 am GMT 0 Comments 1435 by : Yuganthini
ஜெனிவாவில் இம்முறை நடைபெறவுள்ள 46ஆவது மனிதவுரிமை கூட்டத் தொடரில், தமிழர்களின் போராட்டத்திற்கு உரிய தீர்வு கிடைக்குமென்ற நம்பிக்கை எழுந்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் ஞா.சிறிநேசன் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழர்களின் வரலாற்றில் இனப் படுகொலையென்பது தொடர்கதையாக நடந்திருக்கின்றது. 1958ஆம் ஆண்டில் முதற்தடவையாக தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தென்னிலங்கையில் அரங்கேற்றப்பட்டது.
அதற்கு அடுத்ததாக இந்த இனப்படுகொலையானது வடக்கு- கிழக்கில் மையங்கொண்டிருந்தது. அந்த அடிப்படையில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் காரணங்களில்லாமல் கொல்லப்பட்டிருந்தார்கள்.
இலங்கை சுதந்திரமடைந்து 73ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்ற காலகட்டத்தில் 53ஆண்டுகளாக இனப்படுகொலைகளானது அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்று கடைசியாக முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலையானது ஒட்டுமொத்தமாக நிறைவேற்றப்பட்டிருந்தது.
அந்த வரிசையில் கொக்கட்டிச்சோலை படுகொலையானது நான் ஆசிரியராக இருந்த 1987ஆம் ஆண்டு காலத்தில் நடந்தது. 157அப்பாவிகள் அரச உத்தியோகத்தர்கள் என்றும் பாராமல் பலர் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இதுவரை பொறுப்புக்கூறல் நடைபெறவில்லை, உண்மை கண்டறியப்படவில்லை, நீதி வழங்கப்படவில்லை. இவ்வாறான சம்பவங்கள் மீள நிகழாதிருப்பதற்கான உத்திகள் கையாளப்படவில்லை. நிரந்தர அமைதிக்கான அரசியற் தீர்வு கண்டுபிடிக்கப்படவில்லை.
நீண்டகாலமாக உள்நாட்டுப் பொறிமுறை மூலமாக எதையும் தீர்க்க முடியாத கையாளாகாத நிலையில் அரசாங்கம் காணப்பட்டது. உள்நாட்டுப் பொறிமுறை பலவீனமுற்றிருந்த காரணத்தினால் உள்நாட்டில் எதையும் சாதிக்க முடியாத நிலை இருந்த காரணத்தினால் இன்று உள்நாட்டில் முடித்துவைக்கப்பட வேண்டிய பொறுப்புக்கூறல், உண்மையைக் கண்டறிதல், நீதியை வழங்குதல், மீள நிகழாமல் தடுத்தல் போன்ற செயன்முறைகள் எமது கையிலிருந்து சர்வதேச மட்டத்திற்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கின்றது என்றால் இதற்கான முக்கிய பொறுப்பினை அரசாங்கம் எடுக்க வேண்டும். அரசு இந்த விடயத்தை உள்நாட்டில் முடித்திருந்தால் இந்த விடயங்கள் சர்வதேசமயப்பட்டிருக்காது.
இன்று மனித உரிமை ஆணையாளர் (மிச்சேல் பச்லட்) இந்த விடயத்தில் கூடுதலான கரிசனை செலுத்தியிருக்கின்றார். நீண்டகாலமாக தமிழர்களுக்கு கிடைக்காத நீதி, உண்மையைக் கண்டறிதல் விடயங்களில் இப்போது கடும் தொனியில் அவர் சொல்லியிருக்கின்றார்.
எங்களுக்கு அரசர்கள் நீதியைத் தராதுவிட்டாலும் தெய்வம் மூலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு எமது தமிழ்த் தேசியக் கட்சிகள் இம்முறை கருத்தொருமைப்பாட்டோடு ஒன்றாக இணைந்து செயற்பட்டார்கள். டயஸ்போராக்களும் இதற்கான வேலைகளை நேர்த்தியாக செய்தார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும் பாதிக்கப்பட்ட மக்களும் மனிதவுரிமை செயற்பாட்டாளர்களும் போராட்டங்களை நடத்தினார்கள். ஒட்டுமொத்தமாக இந்தப் போராட்டத்திற்கு நம்பிக்கை தரக்கூடிய ஒரு கீற்றொளி 46ஆவது மனிதவுரிமை கூட்டத் தொடரில் நாங்கள் அறியக்கூடிய நிலைமைக்கு வந்திருக்கின்றது.
சிலரை சில நாட்கள் ஏமாற்றலாம், பலரை பல நாட்கள் ஏமாற்றலாம், எல்லோரையும் எல்லா நாட்களும் ஏமாற்ற முடியாது என்பதற்கு இது நல்லதொரு உதாரணமாக இருக்கின்றது.
உள்நாட்டுப் பிரச்சினையை உள்நாட்டிலே நீங்கள் தீர்த்திருந்தால் இன்று சர்வதேசமயப்படுத்தப்பட்ட நிலைக்கு வந்திருக்காது. இன்று இந்தப் பிரச்சினை சர்வதேசமயப்படுத்தப்பட்டிருக்கின்றதென்றால் இதற்குக் காரணம் உங்களது கையாளாகாத தன்மையும் இந்த இனப்பிரச்சினையை உரிய காலத்தில் தீர்க்காதமையுமே ஆகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.