ஜெனீவா விடயத்தில் காட்டிய அக்கறையை தேர்தலில் காட்டவில்லை – வரதராஜப்பெருமாள் சாடல்
In இலங்கை April 4, 2019 8:35 am GMT 0 Comments 2167 by : Jeyachandran Vithushan
தமிழ் தலைமைகள் ஜெனீவா விடயத்தில் கவனம் செலுத்தியமையால் தற்போது மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துவதற்கான செயற்பாடு காலதாமப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் குற்றம்சாட்டினார்.
மேலும் தேர்தலை காலம் தாழ்த்தாது நடத்துவதற்கான எவ்வித முயற்சிகளையும் தமிழ் தலைமைகள் எடுக்கவில்லை எனவும் யாழ்ப்பணத்தில் உள்ள அவரது அலுவகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலார் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம், இன அழிப்பு தொடர்பில் தமிழ் மக்கள் ஜெனிவாவில் நீதி கோரியிருந்தனர்.எனினும் ஜெனிவா சமர் காராசாரம் குறைந்து எம்மை கைவிட்டதாகிவிட்டது.
ஜெனீவா ஊடாக பெறப்பட்ட விடயம் என்னவெனில் காணமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பணியகம் ஒன்று அமைக்கப்பட்டமையே. அது கூட முழுமையாக மக்களுக்கு பயன் கிடைக்கவில்லை.
அதற்கு அப்பால் பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட்டு புதிதாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டவரைபு கொண்டு வரப்படவுள்ளது. அவ்வாறு கொண்டு வரப்படும் சட்டம் முன்னர் இருந்த சட்டத்தினை விட மிக மோசமானது. அதில் அடிப்படை ஜனநாயக உரிமைகளையே முடக்குவதாக அமைந்துள்ளது.
எனினும் இந்த சட்ட வரைபினை மேலைத்தேச நாடுகள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அவ்வாறான நாடுகளில் இதே அமைப்பான சட்டம் இருப்பதாலேயே சர்வதேசம் இதில் அதிக அக்கறை காட்டவிலல்லை.
அரசியல் தீர்வு என கூறிக் கொண்டு இருக்கும் தமிழ் அரசியல் தலைமைகள் மாகாண சபையை வலுப்படுத்த அதிக அக்கறை செலுத்தவில்லை.மாகாண சபையின் ஆயுட்காலம் நிறைவடைந்தும் இன்றுவரை தேர்தலை நடாத்த அழுத்தம் கொடுக்கவில்லை.
வரவு செலவுத்திட்டத்தில் முற்போக்கான திட்டங்கள் எவையும் இல்லை. இது முழுக்க முழுக்க தேர்தலை இலக்காக வைத்தே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை சமர்ப்பிக்கபட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் கடன் சுமையே அதிகரிக்கும் நிலைமை உள்ளது. ‘கம்பரேலிய’ திட்டம் என்ற பெயரில் அரச தரப்பும் அவர்களுக்கு முண்டு கொடுப்பவர்களுக்கும் அதிகளவான நிதிகள் வழங்கப்படுகின்றன.
இது முழுக்க தேர்தலை இலக்கு வைத்தே.இதனை மறைமுக இலஞ்சம் என்றும் கூறலாம். இதனை இங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்துகின்றனர்.” என கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.