ஜேர்மனியில் அங்கெலா மேர்க்கல்லின் கட்சிக்கு புதிய தலைவர் தெரிவானார்!

ஜேர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் (CDU) தலைவராக சென்ட்ரிஸ்ட் அர்மின் லாசெட் (Centrist Armin Laschet) இன்று (சனிக்கிழமை) தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய ஜேர்மனி அதிபர் அங்கெலா மேர்க்கலுக்குப் பின்னர், செப்டம்பர் மாதம் கூட்டாட்சித் தேர்தல்களில் அதிபருக்கான வேட்பாளராக அர்மின் லாசெட் போட்டியிடுவார் என சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
ஜேர்மனியின் அதிக மக்கள் தொகை கொண்ட மேற்கு மாநிலமான வடக்கு ரைன்-வெஸ்ற்பாலியாவின் (North Rhine-Westphalia) பிரதமரான லாசெட்டுக்கு ஆதரவாக கட்சியின் ஆயிரத்து ஒரு பிரதிநிதிகளில் 521 பேர் வாக்களித்துள்ளனர்.
இதேவேளை, இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரீட்ரிக் மெர்ஸுக்கு 466 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், மூன்றாவது வேட்பாளர் நோர்பேர்ட் ரோட்ஜென் முன்னைய சுற்றிலேயே வெளியேற்றப்பட்டார்.
ஜேர்மனிய அரசியலில் ஒரு முக்கியமான ஆண்டின் தொடக்கத்தில் இந்த வாக்கெடுப்பு வந்துள்ளது. எதிர்வரும் செப்டெம்பரில் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் அதிபர் அங்கெலா மேர்க்கெல், தனது தற்போதைய நான்காவது பதவிக்காலத்தின் முடிவில் ஓய்வுபெற திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.