ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் இருந்து பிள்ளையான் விடுதலை
In இலங்கை January 13, 2021 4:37 am GMT 0 Comments 1764 by : Dhackshala
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட ஐந்து பேரும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற விசேட நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் கடந்த 2015ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து, 2015ஆம் ஆண்டு தாங்கள் கைதுசெய்யப்பட்டு குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்ட முதலாம் 02ஆம் எதிரிகளின் வாக்குமூலமானது சுயேட்சையாக வழங்கப்படவில்லை, தூண்டுதல் அல்லது அச்சுறுத்தல் காரணமாக அந்த வாக்குமூலத்தினை வழங்கியிருந்தார்கள், பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் நேரடியாக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு வாக்குமூலம் வழங்கியிருந்ததாக தெரிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றில் மீளாய்வு விண்ணப்பித்தனர்.
இதன் பிரகாரம் குறித்த ஒப்புதல் வாக்குமூலத்தினை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தன் அடிப்படையில் 24ஆம் திகதி மட்டக்களப்பு மேல்நீதிமன்றத்தில் சட்டமா அதிபரின் ஒப்புதலின் பேரில் பிணை வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபர் திணைக்களம் இந்த வழக்கினை தொடர்ந்து நடாத்தமுடியாது என மட்டக்களப்பு மேல் நீதிமன்றுக்கு அறிவித்திருந்த நிலையில், வழக்கின் குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை விடுவித்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.