ஞானசார தேரர் விடுத்த முன்னெச்சரிக்கையை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை – விஜயதாச
பொதுபலசேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் விடுத்த எந்தவொரு முன்னெச்சரிக்கையையும் ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ளவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தேரரின் சுகநலன்களை அறிவதற்காக இன்று (சனிக்கிழமை) அங்கு சென்றிருந்தார். இதன்போது சிறைச்சாலைக்கு வௌியே செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அவர் தெரிவிக்கையில், “ஞானசார தேரர் எப்போதுமே ஒரே நிலைப்பாட்டில்தான் இருக்கிறார். கடந்த 2007 ஆம் ஆண்டு தொடக்கம் நாட்டில் புல்லுருவிகள் போன்று மறைந்திருந்த மனசாட்சியற்ற மிருகத்தனமான தீவிரவாதம் தொடர்பாக எச்சரிக்கை விடுத்து வந்தார்.
ஆனால், எங்கள் நாட்டை ஆட்சி செய்யும் காது கேளாத ஆட்சியாளர்களுக்கு இவை புரியாமல் போனமையாலும், அவர்களின் ஏகாதிபத்தியத்தை நிலைநாட்டிக்கொள்ள முயற்சித்தமையாலும், சிறுபான்மையினரின் வாக்கு வங்கிக்கான பேராசையாலும் இந்த அசம்பாவிதத்தை தடுப்பதற்கு எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.
அதனால் ஞானசார தேரருக்கும் வரம்பு மீறி பேச வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, அவர் உயிரை காத்துக் கொள்வதற்கும், போராடியத்திற்கும் பரிசாக இன்று சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் 4 ஆம் திகதியே இந்தியாவின் புலனாய்வு துறையினர் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்கள். ஆனால் இன்னமும் நமது நாட்டை செவிப்புலன் அற்ற யானைகளே ஆட்சி செய்து வருகின்றன.
எனவே, ஞானசார தேரர் கூறியது போன்று 50 விகாரைகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டாலும் அவர்கள் செவிகளை மூடிக்கொண்டுதான் இருக்கப் போகிறார்கள்.
அதேபோன்றுதான் இந்த நாட்டின் புலனாய்வு துறையினர் சிறையடைக்கப்பட்டுள்ளதுடன், தற்போதுள்ள ரகசிய ஒற்றர் சேவை மழுங்கடிக்கப்பட்டு, அராஜகமான ஆட்சி நடைபெறுவதை தீவிரவாதிகள் தெரிந்து கொண்டு கடந்தமாதம் 21 ஆம் திகதி இந்த தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.