டுபாயில் 2021ஆம் ஆண்டுக்குள் 70 சதவீதமானோருக்கு கொவிட்-19 தடுப்பூசி!

டுபாயில் 2021ஆம் ஆண்டுக்குள் 70 சதவீதமானோருக்கு கொவிட்-19 தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதார ஆணையத்தின் கொரோனா தடுப்பூசி குழுவின் தலைவர் டாக்டர் பரிதா அல் காஜா தெரிவித்துள்ளார்.
டுபாயில் கடந்த வாரம் முதல் சுகாதார ஆணையத்தின் சார்பில் இலவச கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டது. இதில் ஆணையத்தின் கீழ் செயற்படும் சுகாதார மையங்களில் இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஃபைசர்- பயோஎன்டெக் என்ற கொரோனா தடுப்பூசியானது அமீரக சுகாதார அமைச்சகத்தின் ஒப்புதலில் போடப்பட்டு வருகிறது.
தற்போது முதற்கட்டமாக 60வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள், நெஞ்சக நோய்களை உடையவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் ஆகியோருக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் மேற்கூறப்பட்ட பிரிவுகளில் முன்னுரிமை அளிக்கப்பட்டு அவர்களுக்கு மட்டும் போடப்பட்டு வருகிறது.
இரண்டாம் கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் அனைத்து பொதுமக்களுக்கும் தடுப்பூசி போடும் பணியானது தொடங்கப்படும்.
அமீரக சுகாதார அமைச்சகம் ஃபைசர் மருந்தை அவசர பயன்பாட்டிற்காக பதிவு செய்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட இந்த மருந்து 95 சதவீதம் சிறப்பான முடிவுகளை அளித்துள்ளது.
இதன்படி இரண்டாம் கட்டமாக தொடங்கப்படும் கொரோனா தடுப்பூசி திட்டம் முழுவீச்சில் செயற்படுத்தப்படும். இதன் மூலம் டுபாயில் வசிக்கும் மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியை அளிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.