டென்னிஸ் உலகில் பூத்த இரும்பு மலர் அவள்…
January 12, 2018 11:32 am GMT
இரும்பு கரம் – கம்பீரமான தோற்றம் – வசீகரமான பேச்சு – ஆக்ரோஷமான ஆட்டம் என டென்னிஸ் அரங்கை அதிர வைத்தவள் அவள்….
ஆம். செரீனா வில்லியம்ஸ் என எல்லோராலும் அறியப்பட்ட செரீனா ஜேமேக்கா வில்லியம்ஸ், அசாத்திய திறமை உடையவள் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை.
அமெரிக்காவிலுள்ள மிக்சிகனில், பிறந்து வளர்ந்த செரீனாவின் கடந்த காலம் கசப்பானவை. ரிச்சர்ட் வில்லியம்ஸ் – ஒராசின் பிரைஸ் ஆகியோருக்கு கடந்த 1981ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் திகதி மலர்ந்த இரும்பு மலரே செரீனா ஜேமேக்கா வில்லியம்ஸ். அவளுக்கு வீனஸ் வில்லியம்ஸ் என்ற மூத்த சகோதரியும் உள்ளார்.
பிறந்தது முதலே பல சவால்களை சந்தித்த அவள், வெள்ளை-கருப்பு என இனவெறிக்கு மத்தியில், மூன்று வயதில் தனது தந்தையிடம் டென்னிஸ் வித்தையை கற்றுக்கொள்ள தொடங்கினாள். டென்னிஸ் அரங்கில் ஒரு நிலையான இடத்தை பிடிப்பதற்கு கடுமையான போராட்டங்களை எதிர்கொண்ட அவள், இன்று இமயம் தொட்டுள்ளார் என்றால், அவள் அசாத்திய திறமை உடையவள் தானே?
கடந்த 2002ஆம் ஆண்டு டென்னிஸ் களத்திற்கு அடியெடுத்து வைத்த செரீனா, எதிர்காலங்களில் பல சாதனைகளை பதிவு செய்வார் என இந்த உலகம் அன்று எதிர்பார்த்திருக்கவில்லை.
களம் புகுந்தாலே எதிரணி வீராங்கனையை விழி பிதுங்க வைக்கும் வல்லமை கொண்ட செரீனா, திறமையே வியக்கும் அவளது அதீத திறமையின் ஊடாக, டென்னிஸ் களத்தில் சாதித்தவை ஏராளம்.
அவுஸ்ரேலிய ஓபனில் ஏழு முறை, பிரெஞ்ச் ஓபனில் மூன்று முறை, விம்பிள்டனில் ஏழு முறை, அமெரிக்க ஓபனில் ஆறு முறை என மகளிர் ஒற்றையர் பிரிவில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை அசால்டாக வென்று, பெருமிதமின்றி 36 வயதிலும் கம்பீரமாக வலம் வருகிறாள்.
ஆனால் அவளின் சாதனை மீது எத்தனை கண்கள் பட்டதோ, அவளின் நிலை தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது. இனியும் அவள், சாதிப்பாளா? என்பதே இரசிகர்களின் அலைமோதும் கேள்வியாகிவிட்டது.
கடந்த ஆண்டு அவுஸ்ரேலிய ஓபனில் சம்பியன் பட்டம் வென்ற கையோடு தாய்மையடைந்த செரீனா, அன்றைய தினம் இரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை பரிசளித்தார்.
அன்றைய தினம், கிண்ணத்தை கையில் ஏந்தி வெற்றி களிப்பில் இருந்த செரீனா, தான் காதலித்த டென்னிஸ் விளையாட்டில் இன்னும் சாதிப்பேன் என இரசிகர்களிடம் கூறிய உறுதி மொழி, இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கின்றது.
காதல் வாய்ப்பட்டவர்கள் அதிலிருந்து மீளவே முடியாது என்ற இயற்கையின் நியதிக்கு உயிரூட்டியவள் செரீனா. அவள் காதலித்த விளையாட்டை அவ்வளவு சீக்கிரம் கைவிடுவதாக இல்லை.
கர்பமானவதற்கு பின்னர் ஓராண்டு காலம் ஓய்வெடுத்த செரீனா, மீண்டும் களத்திற்கு திரும்பி அபுதாபியில் நடைபெற்ற கண்காட்சி போட்டி ஒன்றில், பங்கேற்றார்.
அன்றைய தினம், இரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கும் இரசிகர்களின் கரகோஷத்திற்கும் மத்தியில் களம் இறங்கிய அவள், யாரும் எதிர்பாராத விதமாக, பிரெஞ்ச் ஓபன் சம்பியனான லாத்வியா வீராங்கனை ஆஸ்டாபென்கோவிடம் 6-2, 3-6, 10-5 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டாள்.
அன்றே ஒலிக்க தொடங்கிவிட்டது செரீனாவிற்கு எதிரான கோஷங்கள், அன்று தொடங்கிய செரீனாவிற்கெதிரான கோஷங்கள் இன்றும் ஓய்ந்த பாடில்லை.
“வாழ்வில் எதுவும் நிரந்தரம் இல்லை என உணரும் தருணம் நெருங்கி விட்டது. அத்தோடு அதற்கு காலமும் வந்துவிட்டது என்பதே யதார்த்தமான உண்மை”
“இரும்பு பெண்மணி துருப்பிடித்து விட்டால்” என இணையங்களில் செரீனாவை கேலிகூத்தாக்குகின்றனர் விமர்சகர்கள்.
எதுவாயினும், உடற்தகுதியை நிரூபித்தால் மட்டுமே விளையாட்டு களத்தில் பிரகாசிக்கலாம் என்ற கோட்பாடு செரீனாவுக்கு மட்டும் விதிவிலக்கல்ல.
ஆனால் போராட்ட குணமுடையவள் செரீனா. இதனை தகர்த்தெறிவாள் என இன்னமும் செரீனாவின் இரசிகர்கள் கூட்டம் நம்புகின்றது.
டென்னிஸ் மைதானத்திற்கும், மட்டைக்கும் விடை கொடுப்பது என்பது, செரீனாவுக்கு மட்டுமல்ல இரசிகர்களிற்கும் கவலையான செய்திதான். ஆனால் அதற்கு வெகு சீக்கிரம் பதில் சொல்ல வேண்டிய நேரம், வெகு துரத்தில் இல்லை என்பது மட்டும் உண்மை.
எதற்கும் அஞ்சாத செரீனாவை இந்த தோல்வியே ஒரு கணம் சிந்திக்க வைத்துவிட்டது. வயதும் ஆகிட்டது, குழந்தை கணவன் என குடும்ப பெண்ணாக மாறுவதா? என்பதை அவள் தீர யோசிக் தொடங்கி விட்டால்.
அதுவும் உண்மை தானோ என்னவோ, தோல்வியின் பின் உத்வேகத்துடன் மீண்டு அவுஸ்ரேலிய ஓபனில் சாதிப்பாள் என எதிர்பார்க்கப்பட்ட செரீனா, இந்த தொடரில் பங்கேற்க போவதில்லை என இரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து விட்டாள்.
தொடர்சியான எதிர்மறையான கருத்துக்கள், அவரின் டென்னிஸ் எதிர்காலத்தை இரசிகர்கள் தரப்பிலும் சற்று யோசிக்க வைத்துள்ளது.
ஆனாலும் விளையாட்டில் திறமையை நிரூபிப்பதற்கு வயது தடையாக அமையும் என்பதை பொருட்படுத்தாதவள் வீர மங்கை செரீனா. அப்படி இருக்கையில் மீண்டும் சாதிப்பாள் என மனதில் கரை படியாத செரீனாவின் இரசிகர்கள் நம்புகின்றனர்.
காய்கின்ற மரத்திற்கு தானே கல் அடி விழும் என்பதை செரீனா நினைப்பதற்கு நீண்ட நேரம் தேவைப்பாடாது. செரீனா மீதான அனைத்து காரசாரமான விமர்சனங்களையும் முறியடித்து அவள் மீண்டும் நான் சாதிக்கப்பிறந்தவள் என்பதை நிரூபிப்பாள்…
-
கிரிக்கெட் மைதானங்களில் மீண்டும் ரசிகர் கூட்டம்!
உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ்...
-
சொன்னதைச் செய்தது சென்னை! சிறந்த தலைமைத்துவம் மகுடம் சூடியது!!
ஐ.பி.எல் என்றாலே கிரிக்கெட் ரசிகர்களிடையெ ஒரு போதை...