டெல்லியில் ஆம் ஆத்மிக்கு கடும் போட்டிகொடுக்கும் பிரியங்காவின் மாபெரும் பிரசாரம்

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மாபெரும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
டெல்லியில் பிரியங்கா காந்தி பிரசாரம் செய்வதற்கு, ஆம் ஆத்மி கட்சி எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில் இன்று (புதன்கிழமை) அவர் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
டெல்லியில் உள்ள முக்கிய சாலைகளில் திறந்த வாகனத்தில் சென்று வீதி வீதியாக அவர் ஆதரவு திரட்டினார். முக்கிய பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசினார். ஏராளமான பெண்கள் அவரை பார்க்க திரண்டனர்.
தலைநகர் டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் 12ஆம் திகதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.
சாந்தினி சவுக், வடகிழக்கு டெல்லி, கிழக்கு டெல்லி, புதுடெல்லி, வடமேற்கு டெல்லி, மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி ஆகிய 7 தொகுதிகளிலும் தற்போது கடும் பிரசாரம் நடந்து வருகிறது.
காங்கிரஸூடன் கூட்டணி அமையாத நிலையில் ஆம் ஆத்மி தனியாக களமிறங்கியுள்ளது. இதனால் பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவி வருகிறது.
கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 7 தொகுதிகளிலும் பா.ஜ.க. வென்றது. எனினும் அடுத்து நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. தோல்வியடைந்தது. அங்கு பெரும் வெற்றிபெற்ற ஆம் ஆத்மி ஆட்சியை கைபற்றியது. இந்நிலையில் இந்த தேர்தலில் மும்முனை போட்டி நிலவி வருகிறது.
இராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் பிரசாரம் செய்வதற்குப் பதிலாக டெல்லியில் பிரியங்கா பிரசாரம் செய்வது ஏன் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று கேள்வி எழுப்பியிருந்தார். அத்துடன் இது பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகளை சிதறடிக்கும் என்பதை சூசகமாக அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், டெல்லியின் வடகிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உள்ளிட்ட வேட்பாளர்களை ஆதரித்து பிரியங்கா காந்தி இன்று மாபெரும் பிரசாரம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.