டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கனடாவில் கார் பேரணி
In இந்தியா December 4, 2020 6:26 am GMT 0 Comments 2285 by : Yuganthini

டெல்லியில் தொடர்ச்சியாக போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, கனடாவில் கார் பேரணியொன்று நடத்தப்பட்டுள்ளது.
குறித்த பேரணியில் நூற்றுக்கணக்கான கார்கள் அணிவகுத்துச் சென்றுள்ளன.
மத்திய அரசினால் கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி, புதிய வேளாண் சட்டங்களை இரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி இவ்வாறு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
மேலும், இவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சிலஅமைப்புக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் போராட்டம் நடத்தும் பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவாக கனடாவிலுள்ள இந்திய வம்சாவளியினர், கார் பேரணியொன்றை நடத்தியுள்ளன.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் லோயர் மெயின்லேண்டின் சர்ரே பகுதியில் இருந்து வான்கூவரில் உள்ள இந்திய துணை தூதரகம் வரை இந்த பேரணி நடைபெற்றுள்ளது.
இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று, தங்கள் கார்கள் மற்றும் டிரக்குகளில் கோரிக்கை பதாகைகள் மற்றும் கனடா கொடிகளை கட்டியபடி சென்றனர்.
இதேவேளை பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள பலர், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில நெடுஞ்சாலைகளில் முகாமிட்டு போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் ஆழமான உறவுகளையும் தொடர்புகளையும் கொண்டிருப்பதாக போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
கனடாவிலுள்ள இந்தோ- கனடிய சமூகத்தில் பலர், இந்தியாவின் பஞ்சாப் பிராந்தியத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்றும் கூறினர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.