டேவிட் மாலன் அதிரடி – ரி-20 தொடரில் தென்னாபிரிக்காவை வயிட் வோஷ் செய்தது இங்கிலாந்து!
In கிாிக்கட் December 2, 2020 5:26 am GMT 0 Comments 1617 by : Jeyachandran Vithushan

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
ஓய்ன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் குயிண்டன் டி கொக் தலைமையிலான தென்னாபிரிக்கா அணியும் கேப் டவுண் மைதானத்தில் நேற்று சந்தித்தன.
அந்தவகையில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களை மாத்திரமே இழந்து 191 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக வான் டெர் டஸ்ஸன் 74 ஓட்டங்களையும் டு பிளெசிஸ் 52 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டனர்.
இங்கிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்களையும் கிறிஸ் ஜோர்டன் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினார்.
இதனை அடுத்து 192 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்கோடு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 17.4 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டினை மாத்திரமே இழந்து வெற்றி இலக்கை கடந்து 9 விக்கெட்களால் வெற்றிபெற்றது.
அவ்வணி சார்பாக டேவிட் மாலன் 99 ஓட்டங்களையும் ஜோஸ் பட்லர் 67 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டனர். தென்னாபிரிக்கா அணி சார்பாக அன்ரிச் நார்ட்ஜே ஒரு விக்கெட்டினை வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை இங்கிலாந்து அணி 3-0 என கைப்பற்றி வெற்றிகொண்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.