டோனிக்கு போட்டிகளில் விளையாட தடை விதித்திருக்க வேண்டும் – சேவாக்
In கிாிக்கட் April 14, 2019 4:30 am GMT 0 Comments 2980 by : Dhackshala

ஐ.பி.எல். போட்டியின்போது நடுவருடன் வாக்குவாதம் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மகேந்திரசிங் டோனிக்கு 3 போட்டிகளில் விளையாட தடை விதித்திருக்க வேண்டும் என இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
டோனி எளிதான தண்டனையுடன் விடுவிக்கப்பட்டிருப்பதாக தான் கருதுவதாகவும் அவருக்கு குறைந்தபட்சம் 2 முதல் 3 போட்டிகளில் விளையாட தடை விதித்திருக்க வேண்டும் என்றும் சேவாக் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் அவர் செய்ததைபோன்று நாளை மற்றொரு தலைவர் செய்யக்கூடும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் நடுவருக்கு என்ன மரியாதை இருக்குமென்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
டோனி மைதானத்துக்குள் செல்லாமல் 4ஆவது நடுவருடன் கலந்துரையாடி முறையிட்டிருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
டோனி இந்திய அணிக்கு ஏராளமாக பங்களிப்புகளை செய்திருப்பது மகிழ்ச்சியான விடயமென்றும் அவர் இந்திய அணியின தலைவராக இருந்தபோது கோபப்பட்டதை தான் பார்த்ததில்லையென்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சென்னை அணிக்காக அவர் சிறிது உணர்ச்சிவசப்பட்டு இவ்வாறு நடந்துகொண்டதாக தான் எண்ணுவதாகவும் இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் விரேந்திர சேவாக தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். போட்டி தொடரில் ஜெய்ப்பூரில் கடந்த வியாழக்கிழமை இரவு நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தின் கடைசி ஓவரில் 4ஆவது பந்தை ராஜஸ்தான் வீரர் பென் ஸ்டோக்ஸ் புல்டாசாக வீசினார். அப்போது களத்தில் இருந்த 2 நடுவர்களில் ஒருவர் அது நோபோல் என்று அறிவித்தார். மற்றொரு நடுவர் நோபோல் இல்லை என்று மறுத்தார். இந்த நிலையில் வீரர்கள் பகுதியில் அமர்ந்திருந்த டோனி மைதானத்துக்குள் நுழைந்து நோபோலை ஏன் ரத்து செய்தீர்கள் என நடுவர்களுடன் காரசாரமாக வாக்குவாதம் செய்தார்.
டோனியின் இந்த செயலை இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் மைக்கேல் வாகன், இந்திய முன்னாள் வீரர் பிஷன்சிங் பெடி உட்பட பலரும் விமர்சனம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.