டோனியின் நிதானம் கலந்த அதிரடி துடுப்பாட்டம்: ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது சென்னை அணி
ஐ.பி.எல். தொடரின் 12ஆவது லீக் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 8 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
சென்னையில் நடைபெற்ற இப்போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி களமிறங்கிய சென்னை அணி, ஆரம்ப விக்கெட்டுகளை சொற்ப ஓட்டங்களிலேயே பறிகொடுத்திருந்தாலும், டோனியும், ரெய்னாவும் இணைந்து அணிக்கு சிறந்த இணைப்பாட்டத்தை பெற்றுக்கொடுத்தனர்.
இதற்கமைய சென்னை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் இறுதிவரை களத்தில் நின்ற டோனி, ஆட்டமிழக்காது 75 ஓட்டங்களை அதிகபட்ச ஓட்டமாக பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் அதிகபட்சமாக ஜோப்ரா ஆர்செர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இப்போட்டியில் உனட்கட் வீசிய இறுதி ஓவரில், 3 சிக்ஸர்கள் அடங்களாக 28 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதன் மூலம், நடப்பு ஆண்டு ஐ.பி.எல். தொடரில் ஒரு ஓவரில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர்கள் வரிசையில் டோனி முதலிடத்தை கொண்டார்.
அத்தோடு, இதுவே டோனி ஐ.பி.எல். தொடரில் பெற்றுக்கொண்ட இரண்டாவது அதிகபட்ச ஓட்டமாகும். இதற்கு முன்னதாக பஞ்சாப் அணிக்காக 79 ஓட்டங்கள் பெற்றதே அவரது சிறந்த ஓட்ட எண்ணிக்கையாக உள்ளது.
இதனையடுத்து, 176 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ஓட்டங்ளை மட்டுமே பெற முடிந்தது. இதனால் சென்னை அணி 8 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியுடன் தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலுமே வெற்றிபெற்ற சென்னை அணி, 6 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
இதன்போது ராஜஸ்தான் அணி சார்பில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக பென் ஸ்டோக்ஸ் 46 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் தீபக் சாஹர், சர்துல் தாகூர், இம்ரான் தஹீர் மற்றும் டுவைன் பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இப்போட்டியின் போது, சஞ்ச சம்சன் ஐ.பி.எல். போட்டிகளில் 2000 ஓட்டங்களை கடந்தார். இதன்மூலம், அவர் குறைந்த வயதில் 2000 ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். அவர் 24 வயது 140 நாட்களில் இந்த சாதனையை படைத்தார்.
இதற்கு முன்னதாக விராட் கோஹ்லி, 24 வயது 175 நாட்களில் இந்த சாதனையை படைத்திருந்தார்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக சென்னை அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனி, தெரிவுசெய்யப்பட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.