ட்ரம்ப்பின் வருமான வரி ஆவணங்களை ஆய்வு செய்வதற்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வருமான வரி ஆவணங்களை ஆய்வு செய்வதற்குத் தடை விதிக்க அந்நாட்டு உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
ட்ரம்ப் தனது வருமான வரியை மிகவும் குறைத்து செலுத்தியதாகப் புகார் எழுந்ததையடுத்து, ட்ரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோதே அவருக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் எழுத்துபூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
ஆனால், தனது வருமான வரிக் கணக்குகளை பொது வெளியில் ஆய்வுக்கு உள்படுத்த இயலாது என்று ட்ரம்ப் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை உச்சநீதிமன்றம் அறிவிக்காமல் இருந்தது.
மேலும், அவர் ஜனாதிபதி பதவி வகித்த காலத்தில் எழுந்த வழக்கு என்பதால், ஜனாதிபதி என்ற முறையில் சிறப்பு விலக்கு பெற இயலும் எனவும் வாதிட்டு வந்தார்.
தற்போது அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் தோல்வியடைந்த பிறகு, அவரது கோரிக்கையை நிராகரித்து, வருமான வரி கணக்குகளை மறுஆய்வு செய்யலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தாமதத்துக்கான காரணம் குறித்தும் ட்ரம்ப்புக்கு சிறப்பு சலுகை ஏதாவது அளிக்கப்படுமா என்பது குறித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவில் தெரிவிக்கவில்லை.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.