ட்ரம்ப் ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்டம் எதிரொலி: போக்குவரத்து- கல்வி அமைச்சுகளின் செயலாளர்கள் இராஜினாமா!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்களினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தினைத் தொடர்ந்து, அமெரிக்க போக்குவரத்து மற்றும் கல்வி அமைச்சுகளின் செயலாளர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் கடந்த வருட இறுதியில் இடம்பெற்றது. குறித்த தேர்தல் முடிவுகளின்படி, ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
எனினும், குறித்த தேர்தல் முடிவுகளை எதிர்த்து டொனால்ட் ட்ரம்ப் பல கருத்துக்களை முன்வைத்து வந்த நிலையில், ஜோ பைடனின் வெற்றியினை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் நேற்றைய அமர்வுக்கு டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்களினால் இடையூறு ஏற்படுத்தப்பட்டது.
குறித்த குழப்பங்கள் வன்முறையாக உருவெடுத்திருந்த நிலையில், அமெரிக்க பாதுகாப்பு படையினரால் போராட்டகக்காரர்களின் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. குறித்த ஆர்ப்பாட்டங்கள் உலகளாவிய ரீத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் கல்வி மற்றும் போக்குவரத்து அமைச்சுக்களின் செயலாளர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மின்னஞ்சல் மூலமாக தமது ஊழியர்களுக்கு விளக்கமளித்துள்ள போக்குவரத்து அமைச்சின் செயலாளர் எலைன் ச்சாஹோ, நேற்று நடைபெற்ற ‘குறித்த ஆர்ப்பாட்டங்கள் அரசாங்கம் சார்பாக செயற்பட முடியாத வண்ணம் என்னை கடுமையாக பாதித்துள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தனது பதவியை இராஜினாமா செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ள கல்வியமைச்சின் செயலாளர் பெட்சி டீவோஸ், அமெரிக்க காங்கிரஸ் அமர்வின் போதான தாக்குதல் நியாயப்படுத்த முடியாதது என தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் தனது பதவியை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
எனினும் அவரது இராஜினாமா கடிதத்திற்கு இதுவரை வெள்ளை மாளிகை நிர்வாகத்திடம் இருந்து எவ்விதமான பதிலும் வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் நிறைவுக்கு வருவதற்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து பல உதவியாளர்கள் வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் குறித்த கலவரத்தின் பின்னர் அவ்வெளியேற்றங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.