தடுப்பூசி பெற்றுக்கொள்பவர்களுக்கு சீரம் நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு!
In இந்தியா January 20, 2021 5:30 am GMT 0 Comments 1347 by : Krushnamoorthy Dushanthini

கோவிஷீல்டு தடுப்பூசியில் உள்ள மூலப்பொருள்களால் கடுமையான ஒவ்வாமைக்கு ஆளாகக் கூடியவர்கள் அந்தத் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டாம் என்று சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து சீரம் நிறுவனம் வழங்கியுள்ள அறிவித்தலில், “கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியில் எல்-ஹிஸ்டிடைன், எல்-ஹிஸ்டிடைன் ஹைட்ரோகுளோரைடு மோனோஹைட்ரேட், மக்னீசியம் குளோரைடு ஹெக்ஸாஹைட்ரேட், பாலிசர்பேட் 80, எத்தனால், சுக்ரோஸ், சோடியம் குளோரைடு, டைசோடியம் எடிடேட் டைஹைட்ரேட், நீர் ஆகிய மூலப் பொருட்கள் கலந்துள்ளன.
தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் முன் தாங்கள் ஏற்கெனவே மேற்கொண்டிருக்கும் மருத்துவ சிகிச்சை குறித்தும், எந்தவொரு மருந்து, உணவு, தடுப்பூசியால் தங்களுக்கு கடுமையான ஒவ்வாமை அல்லது எதிர்வினை ஏற்பட்டிருந்தால் அது குறித்தும் மருத்துவரிடம் கண்டிப்பாகத் தெரிவிக்க வேண்டும்.
தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் முன் காய்ச்சல், இரத்தக் கோளாறு பிரச்சினை, நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் மருந்து குறித்தும் தெரிவிக்க வேண்டும்.
மேலும் கர்ப்பிணிகள், கர்ப்பமாகத் திட்டமிட்டுள்ளவர்கள், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருக்கும் தாய்மார்கள் ஆகியோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் முன் இது குறித்து கண்டிப்பாகத் தெரிவிக்க வேண்டும்.
தடுப்பூசியை செலுத்திக்கொள்ளும் நபர் ஏற்கெனவே மற்றொரு கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டிருந்தால் அது குறித்தும் கண்டிப்பாகத் தெரிவிக்க வேண்டும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.