தடைகளை உடைத்தெறிந்து வெற்றியை நோக்கி பயணிப்பதே எமது இலக்கு- ஜீவன் தொண்டமான்
In இலங்கை November 29, 2020 8:45 am GMT 0 Comments 1482 by : Yuganthini
தீர்வுகளை அடைவதற்கான தடைகளை உடைத்தெறிந்து வெற்றியை நோக்கி பயணிப்பதே எமது உறுதியான கொள்கை என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கொட்டகலை- டெரிக்கிளயார் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் ஜீவன் தொண்டமான் மேலும் கூறியுள்ளதாவது, “மலையகத்திலுள்ள அரசியல்வாதியொருவர் வானொலியொன்றுக்கு நேர்காணல் வழங்கியிருந்தார்.
அதில்ஆயிரம் ரூபாய் கிடைக்குமா என கேட்டனர். கிடைக்காது என்றார். பல்கலைக்கழகம் பற்றியும் வினா எழுப்பப்பட்டது. அதற்கும் வராது என பதிலளித்துள்ளார். மலையக மக்களுக்காக வரவு- செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு இடம்பெறவில்லை எனவும் விமர்சித்துள்ளார்.
அதாவது கிடைக்காது, முடியாது என குறைகளை மட்டும் கூறிக்கொண்டிருப்பது தலைமைத்துவ பண்பு கிடையாது. தீர்வுகளை அடைவதற்காக தடையாக உள்ள காரணிகளை உடைத்தெறியவேண்டும். அதனை எவ்வாறு செய்ய வேண்டும் என திட்டம் வகுக்குவேண்டும். இதனை எம்மால் நிச்சயம் செய்யமுடியும். அரசியலுக்கு அப்பால் சிறந்த நிர்வாகியாக செயற்படுவதையே நான் விரும்புகின்றேன்.
மலையக மக்களும் இலங்கையர்களே, அபிவிருத்தி திட்டங்களுக்காக வரவு- செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி அவர்களுக்கும் உரித்துடையது.
மத்திய அரசாங்கத்தின் வரவு- செலவுத்திட்டம் என்பது முழு நாட்டுக்குமானது. அதில் ஒவ்வொரு பிரிவுகளுக்கான ஒதுக்கீடுகள் இருக்காது என்பதை புரிந்துகொள்ளவேண்டும். பல்கலைக்கழகம் அமைப்பதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.