அனைத்து விமான சேவைகளையும் இரத்து செய்வதாக ஜெட் ஏயார்வேய்ஸ் அறிவிப்பு
பணப் பற்றாக்குறையை அடுத்து ஜெட் ஏயார்வேய்ஸ் விமான நிறுவனம், இன்று (புதன்கிழமை) இரவிலிருந்து தற்காலிகமாக தனது அனைத்து விமான சேவைகளையும் இரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
வங்கியில் இருந்து கிடைக்க வேண்டிய தொகை உடனடியாக கிடைக்காததால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமான போக்குவரத்து துறையில் தனியார் நிறுவனங்கள் குதித்த பின்னர், போட்டி மனப்பான்மையில் பயணிகளுக்கு ஆதரவாக சில நிறுவனங்கள் கட்டணங்களை குறைத்தும், சிறப்பு சலுகைகளை அறிவித்தும் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்தன.
இந்த தொழில் போட்டியில் கிங் பிஷர் உள்ளிட்ட சில நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்தன. அவ்வகையில், ஜெட் ஏயார்வேய்ஸ் நிறுவனமும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.
இதனால், வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து குத்தகை அடிப்படையில் வாங்கி இயக்கும் பல விமானங்களுக்கான வாடகை நிலுவையை செலுத்த முடியாமல் ஜெட் ஏயார்வேய்ஸ் நிர்வாகம் கடந்த காலங்களில் கடும் சிக்கலுக்கு உள்ளாகியது.
அவ்வகையில், நூற்றுக்கும் அதிகமான விமானங்களை வைத்துள்ள ஜெட் ஏயார்வேய்ஸ், பல விமானங்களை இயக்காமல் நிறுத்த வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது. இதுதவிர, வேறுசில காரணங்களுக்காகவும் சில விமானங்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன.
இதனால், போதிய பணப் புழக்கம் இல்லாத காரணத்தினால் அந்நிறுவனத்தின் விமானிகள், பொறியாளர்கள் மற்றும் பணிப்பெண்களுக்கான மாத சம்பளத்தை கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இருந்து குறிப்பிட்ட திகதியில் வழங்காமையும் அந்நிறுவனத்துக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. இதற்கெதிராக, கடந்த சில நாட்களாக ஊழியர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையிலேயே, ஜெட் ஏயார்வேஸ் நிறுவனம் இன்றிரவில் இருந்து தற்காலிகமாக அனைத்து விமான சேவைகளும் இரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.