தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த உலக சுகாதார அமைப்பின் ஆய்வுக் குழு: ஆய்வுப் பணிகள் ஆரம்பம்!

கொரோனா வைரஸ் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள சீனா சென்றிருந்த உலக சுகாதார அமைப்பின் ஆய்வுக் குழு இரண்டு வார தனிமைப்படுத்துதலுக்குப் பிறகு வியாழக்கிழமை தனது ஆய்வுப் பணியைத் ஆரம்பித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு மற்றும் பெய்ஜிங்கிற்கு இடையில் பல மாத பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆய்வு வருகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வுஹான் நகரில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திய கொரோனா தொற்று குறித்து உலக சுகாதார அமைப்பு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சீனாவின் கடவுச்சீட்டு சிக்கல்கள் நிவர்த்தி செய்யப்பட்டதைத் தொடர்ந்து உலக சுகாதார அமைப்பின் 10பேர் கொண்ட ஆய்வுக் குழு கடந்த 14ஆம் திகதி வுஹான் நகரத்தை அடைந்தது.
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஆய்வுக்குழு வியாழக்கிழமை தனது ஆய்வுப் பணியைத் தொடங்கியது.
கொரோனா ஆய்வு நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் கொரோனா தடுப்பு முகாம்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ள ஆய்வுக்குழு கொரோனா தோன்றியதாக குறிப்பிடப்படும் வுஹான் நகரிலும் தனது ஆய்வை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் உலக சுகாதார அமைப்பு தனது விசாரணையாளர்கள் சீனாவிற்குள் நுழைய மறுக்கப்பட்டதாகக் கூறியது. ஆனால் பெய்ஜிங் இது ஒரு தவறான புரிதல் என்றும், விசாரணைக்கான ஏற்பாடுகள் இன்னும் விவாதத்தில் உள்ளன என்றும் கூறியது.
முதல் தொற்று கண்டுபிடிக்கப்பட்ட இடம் வுஹான் என்றாலும், வைரஸ் தோன்றிய இடம் அவசியமில்லை என்று சீனா பல மாதங்களாக கூறி வருகிறமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.