தமிழகத்தில் மேலும் 4 சட்டசபைத் தொகுதிகளுக்கு அடுத்த மாதம் தேர்தல்

தமிழக சட்டசபையில் வெற்றிடமாகவுள்ள மேலும் 4தொகுதிகளுக்கு மே 19ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கே இந்த தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையகம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில், நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்ந்து தமிழக சட்டசபையில் வெற்றிடமாகவுள்ள 18 தொகுதிகளுக்கு வரும் 18 ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதே திகதியில் வெற்றிடமாகவுள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையகம் நிராகரித்துவிட்டது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடியானது.
இந்நிலையில், குறித்த தொகுதிகளுக்கு மே 19 ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெறும் என இன்று அறிவித்துள்ளது.
இந்தத் தேர்தலுக்காக ஏப்ரல் 22 ஆம் திகதி வேட்பு மனுதாக்கல் தொடங்கி 29ஆம் திகதியுடன் நிறைவுபெற்று 30ஆம் திகதி வேட்புமனு பரிசீலனை நிறைவடைவதோடு, மே 2ஆம் திகதி வேட்புமனுக்களை திரும்பப் பெறும் கடைசி நாளாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட நான்கு தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழகத்தின் 18 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளுடன் சேர்த்து மே 23ஆம் திகதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.