தமிழர்களைத் தவிர இந்தியாவிற்குப் பாதுகாப்பாக எவராலும் இருக்க முடியாது- ஸ்ரீதரன்

தமிழர்களைத் தவிர இந்தியாவிற்குப் பாதுகாப்பாக எவராலும் இருக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பாதுகாப்பு நண்பனாக இந்தியாவின் எப்பொழுதுமான பாதுகாவலனாக வடக்கு கிழக்கின் தமிழர்களே இருப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், “சீனாவின் செயற்பாடுகள் என்பது இந்தியாவிற்கு ஆபத்தானது. இந்தியா இனியும் தமிழர்களை எதிரியாகப் பார்க்காது அவர்களின் நலன்களுக்கு அப்பால் இந்தியாவின் நலன்களையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
இணைந்த வட கிழக்கிலே தமிழர்களுக்கான இழந்துபோன உரிமைகள், சுயாட்சியை வழங்குவதன் மூலம் இந்தியாவிற்கான ஓர் பாதுகாப்பு நண்பனாக இந்தியாவின் எப்பொழுதுமான பாதுகாவலனாக வடக்கு கிழக்கின் தமிழர்களே இருப்பார்கள். தமிழர்களைத் தவிர இந்தியாவிற்கு பாதுகாப்பாக எவராலும் இருக்க முடியாது.
எனவே, இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையிலிருந்து மாறி, சீன அரசாங்கத்தின் ஊடாகவோ அல்லது வெளிநாட்டு அரசாங்கத்தின் ஊடாகவோ இலங்கை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளைில் தமிழர்களுடைய இருப்புக்களையும் பாதுகாத்துக்கொண்டு முயற்சித்தால், அது இந்தியாவிற்கு பெரிய பலத்தைத் தரும்.
எமது ஆதரவு இந்தியாவுக்கு இருக்கும். சீனாவோடு எங்களுக்கு இருக்க முடியாது. அதனால்தான் நாங்கள் அடிவாங்குகின்ற காலத்திலும் சரி, நாங்கள் தோற்றுப் போயுள்ள காலத்திலும் சரி இப்பொழுது நாங்கள் ஏதுமற்ற ஏதிலிகளாக இருக்கின்ற காலங்களில்கூட இந்தியாவின் பக்கம் நிற்கின்றோம்.
இந்தியாவிற்கு எப்பொழுதும் நாங்கள் ஆதரவாக இருக்கின்றோம். நாங்கள் இந்தியாவுடன் சேர்ந்து இயங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம் என்ற செய்தியை நாங்கள் மீண்டும் மீண்டும் குறிப்பிடுகின்றோம். அதற்காக, நாங்கள் என்ன விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கின்றோம்” என்று குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.