தமிழர்களை கண்காணித்த புலனாய்வாளர்கள் தேசிய பாதுகாப்பில் பின்னடைவு
In ஆசிரியர் தெரிவு April 29, 2019 9:35 am GMT 0 Comments 2325 by : Yuganthini
தமிழர்கள் ஆயுதம் ஏந்துகின்றார்களா என்பதை கண்காணித்து வந்தார்களே தவிர நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காணப்படுகின்றதா என்பதை பாதுகாப்பு தரப்பினர் கவனத்திற்கொள்ளவில்லையென வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பிலேயே சி.தவராசா இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை முறியடித்த இறுமாப்பிலேயே பாதுகாப்பு தரப்பினர் இருந்தனரே தவிர நாட்டில் வன்முறைகள் ஊடுருவதை எதிர்பார்த்திருக்கவில்லை.
மேலும் வடக்கு- கிழக்கிலுள்ள தமிழர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்துகின்றார்களா என்றே கவனம் செலுத்தி வந்தனர்.
உலக வளர்ச்சிக்கேற்ப, ஏனைய பரிமாணங்களில் நாட்டில் பயங்கரவாத செயற்பாடு ஊடுருவுகிறதா என்பது பற்றி அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை.
இதேவேளை இரு தேசியக் கட்சிகளும் இணைந்து நாட்டில் நல்லாட்சி அரசை அமைத்தது. ஆனால் அண்மையில் நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பநிலை காரணமாக ஜனாதிபதியும் பிரதமரும் ஒருவர் மீது ஒருவர் வெறுப்புக்களை காட்டிக் கொண்டிருக்கின்றனர்.
அவர்களின் வெறுப்புணர்வு மற்றும் முரண்பாடுகளின் விளைவையே மக்களாகிய நாம் அனுபவித்து வருகின்றோம்.
நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இந்தியா உள்ளிட்ட பல தரப்புகளும் புலானாய்வு பிரிவினரும் எச்சரிக்கை விடுத்தும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
இதற்கு முழுப் பொறுப்பையும் தற்போதைய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் ஜனாதிபதியும், பிரதமரும் தங்களுக்கு எதுவும் தெரியாதென கூறி வருகின்றனர்.
இவர்களின் அரசியல் முரண்பாட்டினால் தற்போது நாட்டு மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர்” என சி.தவராசா தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.