மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான தொடர்பென்பது மனித உயிருக்கு அச்சுறுத்தலாக மாறிவருகின்றது.
குறிப்பாக போர் இடம்பெற்ற பகுதிகளில் காடுகள் அழிக்கப்பட்டு தரிசு நிலங்களாக்கப்பட்டுள்ளன. அதனால், வனத்தில் வாழ்ந்த ஜீவராசிகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு படையெடுக்கின்றன.
அந்தவகையில், அண்மைக்காலமாக வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் யானைகளால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆதவனின் இன்றைய அவதானம் கவனஞ்செலுத்துகின்றது.
யானைகளால் ஏற்படும் அச்சுறுத்தலை தடுக்க மூவாயிரம் கிலோமீற்றர் தூரத்திற்கு மின்சார வேலியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் அடையாளம் காட்டப்பட்ட இடங்களில் யானைவேலி அமைக்கப்படவில்லையென வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
கிராமத்திற்குள் நுழையும் யானைகள் மக்களின் விளைச்சலை அழிக்கின்றன. குடியிருப்புகளை பிய்த்தெறிகின்றன. மக்களின் உயிர்களையும் காவுகொள்கின்றன. இவ்வாறு இம்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு யார் பொறுப்பு?
யானை வேலிக்கான அளவீடுகள் முன்னெடுக்கப்பட்ட போதும், அதன் பின்னர் எவ்வித நடவடிக்கையும் இடம்பெறவில்லையென வவுனியா வடக்கு பிரதேச சபையின் தலைவர் ச. தணிகாசலம் குற்றஞ்சாட்டுகின்றார்.
பிரதேச தலைவரின் இக்குற்றச்சாட்டு தொடர்பாக, வனஜீவராசிகள் திணைக்களத்தின் வவுனியா பிராந்திய அதிகாரி துலானை ஆதவனின் அவதானம் தொடர்புகொண்டது.
யானை வேலி அமைப்பதற்கான கம்பிகள் தயாராக உள்ளபோதும், இன்றும் அவற்றிற்கான தூண்கள் வந்தடையவில்லையென அவர் குறிப்பிட்டார். அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லையென அவர் குறிப்பிட்டார்.
மனிதனுக்கும் யானைக்கும் இடையிலான இந்த போரில் மக்களின் உயிர்கள் காவுகொள்ளப்படுவதோடு, அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது.
3000 கிலோமீற்றர் தூரத்திற்கு யானை வேலி அமைக்கும் அரசாங்கத்தின் செயற்பாடு இழுத்தடிக்கப்பட்டு வருவதானது, மக்களை மேலும் சிரமத்திற்குள் தள்ளுவதாக அமைந்துள்ளது.